தமிழ்நாடு

tamil nadu

வச்சு செய்யப் போகும் புயல்; சென்னைக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு..எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 5:17 PM IST

Updated : Nov 30, 2023, 5:48 PM IST

Chennai Rainfall Update: வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல், வட தமிழகத்தை நோக்கி வரும் டிச.3 ஆம் தேதி வரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

imd issues warning cyclone to tamilnadu and Chennai Heavy Rain update
தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

சென்னை:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே, வட தமிழகத்தை நோக்கி புயல் ஒன்று உருவாகி வருவதாகவும் இதனால், சென்னை பகுதியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது டிசம்பர் 3ஆம் தேதி அன்று புயலாக வலுப்பெறக்கூடும் என தென் மண்டல வானிலை மையத்தின் இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், "தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவ.30) காலை 08.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் டிசம்பர் 3ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு, வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4ஆம் தேதி அன்று அதிகாலை வாக்கில் வடதமிழகம்-தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும்" என்று தெரிவித்துள்ளார்.

8 மாவட்டங்களுக்கு கனமழை:மேலும், "தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தினாலும், நாளை ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இதைத்தொடர்ந்து டிசம்பர் 3ஆம் தேதி அன்று வட தமிழக மாவட்டங்களான, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்ததுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், வடதமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் காரைக்கா பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் 19 செ.மீ மழை பதிவாகி உள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:கனமழை எதிரொலி; எழும்பூர் அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகத்தைச் சூழ்ந்த மழை நீர்!

Last Updated :Nov 30, 2023, 5:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details