தமிழ்நாடு

tamil nadu

"சென்னையில் குடிநீர் பிரச்னையே இல்லை, அந்த அளவுக்கு மழை பெய்கிறது" - முதலமைச்சர்

By

Published : Nov 20, 2022, 8:46 PM IST

சென்னை மேயராகத் தான் பொறுப்பேற்றபோது பெய்தது போலவே, இப்போதும் அதிகளவு மழை பெய்துள்ளதாகவும், அதனால் சென்னையில் இப்போது குடிநீர் பிரச்னையே இல்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Chief
Chief

சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 54 ஜோடிகளின் திருமண விழாவை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

விழாவில் பேசிய அவர், தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 வகையிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன என்றும், நகரப்பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் கட்டணமில்லாமல் பயணம் செய்ய சலுகை வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளின் அனைத்து கோரிக்கைகளையும் முழுமையாகப் பரிசீலித்து, விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் அழைத்து, கோரிக்கைகளுக்கு எப்படி நிதி ஒதுக்குவது என்று ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும், அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும் உறுதி அளித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், "1996ஆம் ஆண்டு, நான் சென்னை மேயராகப் பொறுப்பேற்ற அடுத்த நிமிடமே மழை ஆரம்பித்தது. இருபது நாட்கள் தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. எந்த வேலையும் செய்ய முடியவில்லை.

மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளையெல்லாம் நாங்கள் பார்த்து சீர்படுத்திக் கொண்டிருந்தோம். அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி, தானும் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட வேண்டும், மக்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும், நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று சொன்னார். உடனே மாநகராட்சி வாகனத்தில் அவரையும் அழைத்துக்கொண்டு சென்னை முழுவதும் சுற்றிப் பார்த்தோம். காரில் போய்க் கொண்டிருக்கும்போது வேடிக்கையாக சொன்னார், ஸ்டாலின் சென்னைக்கு மேயராக வந்தால், மழை பேயராக இருக்கிறது என்று.

அதுபோல, இப்போது குடிநீர் பிரச்னையே இல்லை. அந்த அளவுக்கு மழையும் பெய்து கொண்டிருக்கிறது. அந்த மழையை எப்படி சமாளித்துக்கொண்டிருக்கிறோம்? ஏற்கெனவே கடந்த ஆண்டு மழை பெய்தபோது என்ன நிலை? அதுவும் உங்களுக்குத்தெரியும். இப்போது என்ன நிலை? நாங்கள் முழுமையாக செய்து முடிக்கவில்லை. மழைநீர் வடிகால் பணிகள் 80 முதல் 95 விழுக்காடு தான் முடித்திருக்கிறோம். அதற்கே மக்களிடமிருந்து பாராட்டு வருகிறது. இன்னும் பணிகள் இருக்கிறது. அதையும் வரக்கூடிய காலகட்டத்தில் செய்து முடிப்போம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details