தமிழ்நாடு

tamil nadu

புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, மதுரையில் புதிய சேமிப்புக் கிடங்குகள் -முதலமைச்சர் ஸ்டாலின் திறப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 3:35 PM IST

CM Stalin Inaugurated New Storage Warehouses: முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் 3 சேமிப்பு கிடங்குகளை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, 2 கிடங்குகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.8) கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் புதுக்கோட்டை, ராணிப்பேட்டை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 7 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மூன்று கிடங்குகளை திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து, திருப்பூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 6 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள 2 கிடங்குகளுக்கு அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் 2021-22ஆம் ஆண்டிற்கான உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் 7.30 கோடி ரூபாய் செலவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதலாக 3 ஆயிரத்து 400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல், 2022-2023ஆம் ஆண்டிற்கான உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் ராணிப்பேட்டை மற்றும் திருமங்கலம் சேமிப்புக் கிடங்கு வளாகங்களில், காலியாக உள்ள இடத்தில் கூடுதலாக 3 ஆயிரத்து 400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவருப்பூர், ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டை, மதுரை மாவட்ட கப்பலூர் ஆகிய மூன்று இடங்களில் 3 ஆயிரத்து 400 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட கிடங்குகளை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பிறகு, ரூ. 6.40 கோடியில் திருப்பூர் மாவட்ட பல்லடம், திருப்பத்தூர் மாவட்ட குனிச்சி ஆகிய இரண்டு இடங்களில் புதியதாக கட்டப்பட உள்ள 3 ஆயிரத்து 400 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட சேமிப்பு கிடங்கு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

53 பணியாளர்களுக்கு ஆணை: அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 53 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் ஸ்டாலின் 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப. ரங்கநாதன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:கேரளாவில் ஆளுங்கட்சியை வீழ்த்திய காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி.. கோட்டயத்தில் கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details