தமிழ்நாடு

tamil nadu

Saidapet: சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பழ வியாபாரி வெட்டி கொலை!

By

Published : Jul 20, 2023, 10:53 AM IST

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

again one Woman attacked at Chennai Saidapet railway station
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

சென்னை: சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜி என்கிற ராஜேஸ்வரி (34). இவர் ரயிலில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை எழும்பூரில் இருந்து கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் ராஜேஷ்வரி பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். குறிப்பாக, ரயிலானது சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நிற்கும்போது இறங்கி நடைமேடையில் ராஜேஷ்வரி பழ வியாபாரம் செய்து வந்துள்ளார்.

அப்போது திடீரென ரயிலில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் சிலர், தங்கள் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜேஷ்வரியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராஜேஸ்வரியை ரயில்வே போலீசார் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ்வரி, நள்ளிரவு சுமார் 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரிக்கு 4 கணவர் இருந்ததாகவும், அதில் மூன்றாவது கணவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டதாகவும், தற்போது இரண்டாவது கணவருடன் ராஜேஸ்வரி வசித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் நடந்த திருமணத்திற்கு ஆஸ்திரேலியாவில் விவாகரத்தா? - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திருமணம் மீறிய உறவின் காரணமாக கொலை நடந்துள்ளதா அல்லது வேறு எதுவும் காரணமா என ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், நடைமேடை வியாபாரிகளிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது போல கடந்த 2016ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம் பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையையே உலுக்கியது. தொடர்ந்து, சமீபத்தில் பரங்கிமலை நிலையத்தில் சத்யா என்ற கல்லூரி மாணவியை தனது காதலை ஏற்கவில்லை என்று ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது.

இந்த நிலையில், மீண்டும் ஒரு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ரயில் நிலையத்தில் அரங்கேறி இருப்பது சென்னைவாசிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ரயில் நிலையமா இல்லை கொலை நிலையமா என்று பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: "துன்பம் வரும் வேளையிலே சிரிங்க" - சிவாஜியின் பாடலை பாடி அசத்தும் 2ஆம் வகுப்பு மாணவன்!

ABOUT THE AUTHOR

...view details