ETV Bharat / state

இந்தியாவில் நடந்த திருமணத்திற்கு ஆஸ்திரேலியாவில் விவாகரத்தா? - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

author img

By

Published : Jul 20, 2023, 6:50 AM IST

இந்தியாவில் திருமணம் முடித்த தம்பதிக்கு விவாகரத்து வழங்கிய ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Chennai family court
சென்னை குடும்பநல நீதிமன்றம்

சென்னை: கர்நாடகாவைச் சேர்ந்த ஆணும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரும் ஆஸ்திரேலியாவில் படிக்கும்போது பழகி, காதலித்து வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, கடந்த 2006ஆம் ஆண்டு அக்டோபரில் சென்னையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அவர்கள் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த நிலையில், மனைவியின் மதம், கலாச்சாரம், மொழி ஆகியவை குறித்து கணவரின் குடும்பத்தினர் பிரச்னை செய்து, அந்த பெண்ணை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் வேறொரு பெண்ணுடன் கணவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அவரது செலவுகளுக்காக லட்சக்கணக்கில் பணத்தை பறித்ததுடன், கடுமையான வார்த்தைகளால் திட்டி, அப்பெண்ணை அடித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஆஸ்திரேலியாவுக்கு வந்த தாயுடன் சேர்ந்து கொடுமைப்படுத்திய கணவன் மீது மனைவி புகார் அளித்தது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் பெடரல் சர்க்யூட் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி கணவன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் விவாகரத்து வழங்கி 2020இல் உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனைவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 3வது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி கே.எஸ்.ஜெயமங்களம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் ஆஜராகுமாறு மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் அப் மூலம் கணவனுக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி, இந்தியாவில் நடைபெற்ற திருமணத்திற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் விவாகரத்து வழங்க முடியாது என்பதால், அந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், “இந்து திருமணச் சட்டம் அல்லது சிறப்பு திருமணச் சட்டம் என எந்த சட்டத்தின் கீழ் இந்தியாவில் திருமணம் நடந்திருந்தாலும் அது தொடர்பாக இந்தியாவில்தான் வழக்கு தொடர முடியும்” என்றார்.

அதுமட்டுமல்லாமல், அடிலெய்ட் நீதிமன்றத்தில் கணவன் தொடர்ந்த வழக்கில் மனைவிக்கு சம்மனும் அனுப்பாமல் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளதாகவும், வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக ஆஸ்திரேலிய நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில், ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் பெடரல் சர்க்யூட் நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து செல்லாது என அந்த தீர்ப்பை ரத்து செய்வதாக நீதிபதி ஜெயமங்களம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "இந்தியா" பெயர் விவகாரம்.. 26 எதிர்க்கட்சிகள் மீது புகார்! எதுக்கு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.