தமிழ்நாடு

tamil nadu

அலட்சியம், பேராசை - தமிழக அரசை கடுமையாக சாடிய சந்தோஷ் நாராயணன்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 12:28 PM IST

Santhosh Narayanan accused the government: சென்னையில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்து கொள்வது குறித்தும், அதன் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படுவது குறித்தும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Chennai facing flood for every year Music director Santhosh Narayanan accused the government
தமிழக அரசை கடுமையாக சாடிய சந்தோஷ் நாராயணன்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த இரு நாட்களாக சென்னை முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. திங்கட்கிழமை முழுவதும் பெய்த கனமழையால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.‌ பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.‌

இதன் காரணமாக பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தற்போது வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்புப் படையினர் படகு மூலம் மீட்டு வருகின்றனர். கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக மோசமான மழையை இது கொடுத்துள்ளது.

இந்த நிலையில் சென்னையின் மோசமான நிலை குறித்து நடிகர் விஷால் ஆவேசமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும், நடிகர் விஷ்ணு விஷால் தங்கள் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதால் உதவி வேண்டும் என்று X சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். உடனே அங்கு சென்ற மீட்புப் படையினர், விஷ்ணு விஷால் உள்ளிட்டவர்களை மீட்டனர். அப்போது அங்கு பாலிவுட் நடிகர் அமீர் கானும் மீட்கப்பட்டார். நடிகர் அமீர் கான் தனது தாயின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவரது X சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், “10 வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. 100 மணி நேரத்திற்கும் மேலாக முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்குகிறது. மின்வெட்டும் ஏற்படுகிறது என்பது கடினமான உண்மை. இந்த வருடமும் மழைப்பதிவு புதிய வரையறை அமைத்துள்ளது. மேலும், நான் இருக்கும் கொளப்பாக்கம் பகுதி ஒன்றும் ஏரியோ, தாழ்வானப் பகுதியோ கிடையாது. இங்கு நிறைய திறந்த வெளிகள், குளங்கள் உள்ளன.

ஆனாலும் தண்ணீர் தேங்குகிறது. அலட்சியம், தவறான நிர்வாகம், பேராசை இதுவே இதற்கு காரணம். இதுதான் மழை மற்றும் கழிவு நீரை ஒரே கால்வாயின் கொட்டுவதற்கு வழிவகுத்துவிட்டது. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் எங்கள் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் ஆறுபோல் தாக்குகிறது. மீட்புப் பணிகளுக்காக என்னிடம் ஒரு படகும், பம்புகளும் நிரந்தரமாக உள்ளன.

மக்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவி செய்ய முடிந்த அளவு முயற்சி செய்து வருகிறேன். எங்கும் நேர்மறையான எண்ணங்கள் சூழ்ந்து உள்ளன. சென்னை மக்களின் ஆன்மாவிற்கு பாராட்டுக்கள். பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மழை வெள்ளத்தில் சிக்கிய நடிகர்கள் விஷ்ணு விஷால் - அமீர்கான் - ஓடிச் சென்று உதவிய நடிகர் அஜித்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

ABOUT THE AUTHOR

...view details