தமிழ்நாடு

tamil nadu

"வங்கி கணக்கில் பணம் செலுத்துவதை மோடி அரசிடம் இருந்து திமுக கற்றுக்கொள்ள வேண்டும்" - அண்ணாமலை ஆவேசம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2023, 10:55 PM IST

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வெள்ள நிவாரண நிதியை தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் நிவாரண தொகையை பொதுமக்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை

சென்னை: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது, "ஒரு நீதிபதியின் தலைமையில் மழைநீர் வடிகால் பணிகள் செய்தார்களா இல்லையா என தணிக்கை செய்தாலே தெரிந்துவிடும் பணி நடைபெற்றதா, இல்லையா என்று. இதில் விவாதிக்க ஒன்றும் இல்லை. கே.என் நேரு கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு 98 சதவீத பணிகள் முடிந்ததாகக் கூறினார். ஆனால் தற்போது அவர் வெளியிட்ட அறிவிப்பில் 42 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது.

பணிகளை முழுமையாக செய்துள்ளதாக மக்களிடம் சொல்ல விரும்பினால் உச்ச நீதிமன்றத்தின் முன்னிலையிலோ அல்லது உயர் நீதிமன்றத்தின் முன்னிலையிலோ இதை ஆடிட் செய்ய வேண்டும். இன்று(டிச.10) முதலமைச்சர் அறிவித்துள்ள நிவாரணத் தொகை மத்திய அரசின் நிதியிலிருந்து(STRF) அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முதலமைச்சர் அறிவித்தது ஒன்றும் பிரமாதம் இல்லை. மழை பெய்து 7 நாட்கள் ஆகியும் இன்னும் சில பகுதிகளில் பாதிப்பு குறையவில்லை. பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அதனால் நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். அதேப்போல் சேதமடைந்த பகுதிகளையும் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.

கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் சரியாக சல்யூட் அடிக்கவில்லை என்றும், கன்னியாகுமரியில் அமைச்சர் மனோ தங்கராஜ் சென்ற போது அரசு அதிகாரி எழுந்து நிற்கவில்லை என்றும் திமுகவினர் பிரச்சனை செய்கிறார்கள். திமுகவினர் இதில் காட்டும் கோபத்தை இந்த மழை பாதிப்பு பணியில் காட்டினால் மக்களுக்காவது நல்லது நடக்கும். அரசு அதிகாரிகள் ஒன்றும் திமுகவின் கொத்தடிமைகள் இல்லை.

நிவாரணத் தொகையை நேரடியாக மக்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு டோக்கன்கள் கொடுப்பது, சேதம் தொடர்பாக தாசில்தார் அலுவலகம் சென்று சான்றிதழ் வாங்கி, நிவாரணத் தொகை பெற வேண்டும் என்றால் நிவாரணம் பெறுவதற்கு ஒரு வருடம் எடுத்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. வங்கி கணக்கில் பணம் செலுத்துவதை மோடி அரசிடம் இருந்து திமுக கற்றுக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"பிரதமர் போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிடுவோம்" - விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம்!

ABOUT THE AUTHOR

...view details