தமிழ்நாடு

tamil nadu

சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக உறுப்பினர் ஜடேஜாவே காரணம் - அண்ணாமலை சர்ச்சை ட்விட்!

By

Published : May 30, 2023, 1:24 PM IST

Updated : May 30, 2023, 1:43 PM IST

5வது முறையாக கோப்பை வென்றுள்ள சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சிஎஸ்கே வீரர் ஜடேஜாவை பாஜக உறுப்பினர் என குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

‘பாஜக உறுப்பினர் ஜடேஜா’ - அண்ணாமலை சர்ச்சை வாழ்த்து
‘பாஜக உறுப்பினர் ஜடேஜா’ - அண்ணாமலை சர்ச்சை வாழ்த்து

சென்னை: நேற்று (மே 29) நடைபெற்ற ஐபிஎல் 2023 போட்டியின் இறுதிப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. இதன் பரபரப்பான கடைசி ஆட்டத்தின்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் எம்எஸ் தோனி ரன் ஏதும் எடுக்காத நிலையில், ஒரே பந்தில் ஆட்டம் இழந்தார்.

இதனால் மைதானமே அமைதி காத்தது. இருப்பினும், ரவீந்திர ஜடேஜா களத்தை சரியாகப் பயன்படுத்தினார். ஆட்டத்தின் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. அப்போது, ஜடேஜா அதிரடியாக ஒரு சிக்ஸ் அடித்தார். இதனால் மைதானம் ஆர்ப்பரிக்கத் தொடங்கியது.

இதனையடுத்து 1 பந்தில் 4 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. இந்த நேரத்தில் மைதானத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி, தொலைக்காட்சி மற்றும் ஓடிடி நேரலை ஆகியவற்றில் பார்த்துக் கொண்டிருந்த அனைத்து ரசிகர்களும் சிஎஸ்கே வெற்றி பெற வேண்டத் தொடங்கினர்.

ஏன், சிஎஸ்கே கேப்டன் தோனியே ஒரு நிமிடம் மெளனமாக தலை குனிந்த நிலையில் அமர்ந்திருந்தார். இதற்கு அடுத்த நொடியில், ஜடேஜா பவுண்டரியை விளாசி விட்டு, அடுத்த நொடியே மைதானத்தை சுற்றி வந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இறுதியாக, தோனி அவரை தூக்கி தனது கண்ணீர் கலந்த மகிழ்ச்சியில் ரசிகர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தார்.

இதன் மூலம் 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. இதற்கு பிற கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ட்விட்டர் பதிவில், “கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா. அவர் மனைவி ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர். மேலும் அவர் குஜராத்காரர். பாஜக காரியகர்த்தா ஜடேஜாதான் சிஎஸ்கேவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளார்” என பதிவிட்டுள்ளார்.

சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி பாஜக சட்டமன்ற உறுப்பினராக உள்ள நிலையில், ஜடேஜாவை பாஜக உறுப்பினராக அண்ணாமலை குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம், ‘குஜராத்காரரை (ஜடேஜா) வைத்து குஜராத்திலேயே குஜராத்தை தோல்வி அடைய வைத்து விட்டோம்’ என்ற மீம்ஸ்களும் இன்ஸ்டாகிராம், ஷேர் சாட் போன்ற சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:MS Dhoni retirement: ஐபிஎல் ஓய்வு குறித்து பேசிய தோனி.. அதிலும் ஒரு ட்விஸ்ட்!

Last Updated : May 30, 2023, 1:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details