தமிழ்நாடு

tamil nadu

இல்லம் தேடி கல்வித் திட்டம் - ஆசிரியர்களின் ஆலோசனை என்ன?

By

Published : Oct 21, 2021, 6:16 PM IST

இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், ஆசிரியர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

ஆசிரியர்களின் ஆலோசனை என்ன?
ஆசிரியர்களின் ஆலோசனை என்ன?

சென்னை:தமிழ்நாட்டில் மாலை நேரங்களில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக அரசு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மேலும் தன்னார்வலர்கள் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்பட்டு, அவர்கள் மூலம் கல்வி கற்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

இந்தத் திட்டத்திற்கான இணையதளத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி கடந்த 18ஆம் தேதி தொடங்கி வைத்தார். மேலும் இந்தத் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்கவும் உள்ளார்.

இதுகுறித்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் கருத்துகளைக் கேட்டறிந்தார்.

இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னர் திருத்தங்களை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தன்னார்வலர்கள் மூலம் பாடம்

தமிழ்நாடு ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனர் அருணன் கூறுகையில், "இல்லம் தேடி கல்வித் திட்டம் வரவேற்க வேண்டியதாகும். கரோனா காலத்தில் 19 மாதங்களாக மாணவர்கள் வீட்டிலேயே இருக்கின்றனர்.

இந்த காலத்தினை இடைநிற்றல் காலமாகவே கருத வேண்டும். பிரிட்ஜ் கோர்ஸ் முறையில் தன்னார்வலர்களைக் கொண்டு பாடம் நடத்துவதால் அவர்களின் இடைநிற்றலைக் குறைக்கலாம்.

மாணவர்கள் விளையாட்டாகவே பாடங்களைப் பயிற்சி அளிக்கும் வகையில் எடுக்கலாம். மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்ற எண்ணத்தை உருவாக்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மதியம் 12 மணி வரை பாடம் நடத்த வேண்டும். மாலையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் பாடம் கற்பிக்க வேண்டும். 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாலை 3.30 மணி வரையில் பள்ளிகளைத் திறக்கலாம்" என்றார்.

சுண்டல், பிஸ்கட் வழங்கலாம்

இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் கூறும்போது, "கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் கற்றலில் முடக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் முடக்கத்தைச் சரி செய்யும் பொருட்டு, இல்லம் தேடிக் கல்வி திட்டத்தினை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கின்றது.

இந்தத் திட்டத்தை முழுமையாக வெற்றி பெறச் செய்வதற்கு, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும்.

தகுந்த பாதுகாப்பு நெறி முறைகளோடும், பெற்றோர்களுக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும்.
மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கும் வகையில் உடல் ஆரோக்கியத்துடன் சுண்டல், பிஸ்கட் போன்றவைகளை வழங்கலாம்.

கார்ட்டூன்கள் மூலம் கற்பித்தல்

மாணவர்கள் ஆர்வத்தோடும் ஈடுபாட்டோடும் கற்பதற்கு ஏற்ப எளிமையான முறையில் பாடப் பயிற்சி கட்டகங்களை வடிவமைத்துத் தர வேண்டும்.

விளையாட்டு வழி கற்றல், குறிப்பாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் எழுத்துகளே மறந்துபோய் உள்ளதால், குழந்தைகள் அதிகம் விரும்பிப் பார்க்கும் கார்ட்டூன் படங்கள் மூலமாகவும் விளையாட்டு உபகரணங்கள் மூலமாகவும் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

பள்ளிகளுக்கு மாணவர்கள் வராமல் மாலை நேர வகுப்புக்கு மட்டும் வந்தால் போதும் என்ற மனநிலை பெற்றோரிடம் ஏற்படாத வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:மினி பஸ்ஸில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு - பதைபதைக்க வைக்கும் காணொலி!

ABOUT THE AUTHOR

...view details