தமிழ்நாடு

tamil nadu

சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தை திருமண விவகாரம் - வழக்கு விசாரணை ஜனவரி 8 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 10:45 PM IST

Chidambaram temple Dikshitar on child marriage issue: சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிர்வாகத்தைப் பறிக்க வேண்டுமென்ற உள்நோக்கத்தில் குழந்தை திருமணம் குறித்து சட்ட நடவடிக்கையை எடுத்திருப்பதாகத் தீட்சிதர்கள் கூறும் குற்றச்சாட்டுத் தவறானது என அறநிலையத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

adjournment-of-case-against-chidambaram-temple-dikshitars-to-january-8
சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தை திருமண விவகாரம் - வழக்கு விசாரணை ஜனவரி 8 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள பொது தீட்சிதர்கள், 12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர் என்றும், இந்த குழந்தை திருமணங்களைத் தடுக்க இந்து சமய அறநிலையத் துறை செயலாளர், ஆணையர், சமூக நலத்துறை செயலாளர், கடலூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அடங்கிய நிரந்தர கண்காணிப்புக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் எஸ்.சரண்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோர் சார்பில் கடலூர் அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் என்பவரின் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் மீது போக்சோ தடுப்பு மற்றும் திருமண தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது, கைது நடவடிக்கை தொடர்பாகத் தேசிய மனித உரிமை ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் மற்றும் இணை ஆணையர் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில், பொது தீட்சிதர் குடும்பத்தினர் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்திற்கு விரோதமாகத் திருமணங்கள் செய்து வைப்பதாகத் தொடர்ந்து புகார்கள் வந்ததன் அடிப்படையிலேயே கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, குழந்தை திருமணம் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாருக்கும், அறநிலையத்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அறநிலையத்துறை தரப்பில் தீட்சிதர்களுக்கு எதிராக எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை என்றும் தீட்சிதர்கள் தரப்பு விளக்கம் அளித்தது.

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தைத் தீட்சிதர்களிடமிருந்து பறிக்கும் உள்நோக்கத்தோடு சமூக நலத்துறை அதிகாரியும், அனைத்து மகளிர் காவல் நிலையத்தினரும் இந்த சட்ட நடவடிக்கையை எடுத்திருப்பதாகத் தீட்சிதர்கள் கூறும் குற்றச்சாட்டு அச்சத்தின் காரணமாகக் கூறப்படும் தவறான குற்றச்சாட்டு எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தை திருமணங்களைக் கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்களை அமைப்பது என்பது அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் எனவும், மனுதாரரின் கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நீதிபதிகள் வழக்கின் விசாரணை ஜனவரி 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:கோயில் சிலைகளை பாதுகாக்க அரசின் நடவடிக்கை என்ன? - அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details