தமிழ்நாடு

tamil nadu

விழுப்புரம் வானூரில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்படுமா? - அமைச்சர் பொன்முடியின் பதில் என்ன?

By

Published : Mar 28, 2023, 1:50 PM IST

தமிழ்நாட்டில் உள்ள 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் 2,753 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன்மிகு மையங்களாக தரம் உயர்த்தப்பட உள்ளதாகவும், மாணவர்களுடைய சேர்க்கையைப் பொறுத்தே புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்படும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

che
அரசு

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(மார்ச்.28) கேள்வி நேரத்தில் வானூர் சட்டமன்ற உறுப்பினரான சக்கரபாணி, வானூர் ஒன்றியத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "பல்வகை தொழில் நுட்பக் கல்லூரிகளில் பெரும்பாலும் மாணவர்கள் சேர்வதில்லை. இருந்தாலும், புதுமைப்பெண் திட்டத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் பெண்களுக்கும் 1,000 ரூபாய் உதவித்தொகை என்ற அறிவிப்பின் காரணமாக, இந்த ஆண்டை பொறுத்தவரையில் 10,500 மாணவிகள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

ஒரு பாலிடெக்னிக் கல்லூரி ஆரம்பிக்க கிட்டத்தட்ட 44.38 கோடி ரூபாய் செலவாகிறது. நாங்கள் நிதிநிலையை கூட பார்க்கவில்லை. அதில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். தரம் உயர்த்தப்பட வேண்டும். அந்த அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரிகளை தரம் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தொழில் துறை 4.0 தரத்திற்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை திறன் மிகு மையங்களாக மாற்றும் திட்டத்தை வரும் ஆண்டில் செயல்படுத்த இருக்கிறோம். குறிப்பாக 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் 2,753 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன்மிகு மையங்களாக தரம் உயர்த்தப்பட உள்ளன.

அதேபோல் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அம்பத்தூரில் தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இதன் மூலம் நிச்சயமாக பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி போன்ற கல்லூரிகளில் மாணவர்களுடைய சேர்க்கை அதிகரிப்பதற்கான எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். நிதி மட்டும் இதற்கு காரணம் அல்ல, மாணவர்களுடைய சேர்க்கையைப் பொறுத்துதான் கல்லூரிகள் தொடங்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: Edappadi Palaniswami: அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி.. ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details