தமிழ்நாடு

tamil nadu

12th Result: தமிழ்நாட்டில் நாளை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு - SMS-ல் அறிந்து கொள்ளலாம்!

By

Published : May 7, 2023, 3:46 PM IST

தமிழ்நாட்டில் நாளை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவை, செல்போன் எஸ்எம்எஸ் மூலம் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

plus two exam result
12ம்வகுப்பு தேர்வு முடிவு

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 13ம் தேதி துவங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதினர்.

தமிழ்நாட்டில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 156 மாணவர்கள், 4 லட்சத்து 33 ஆயிரத்து 436 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டு, 3185 மையங்களில் நடைபெற்றது. புதுச்சேரி பள்ளிகளில் 6 ஆயிரத்து 982 மாணவர்கள், 7,728 மாணவிகள் என 14 ஆயிரத்து 710 பேர், 40 தேர்வு மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. தனித்தேர்வர்களாக 14 ஆயிரத்து 966 மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு, 134 தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது.

இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10ம் தேதி தொடங்கியது. இதில் அனுபவம் வாய்ந்த முதுகலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பின்னர் கடந்த 11ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது. மே 5ம் தேதி தேர்வு முடிவை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் மனநிலை பாதிக்கக்கூடாது என்பதற்காக 8ஆம் தேதிக்கு (நாளை) மாற்றம் செய்யப்பட்டது.

அரசுத் தேர்வு துறை இயக்குநர் சேதுராம வர்மா பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை செய்து, தயார் நிலையில் வைத்துள்ளார். இந்நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகளை நாளை காலை 9.30 மணி அளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிடுகிறார்.

தேர்வு முடிவுகள் மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளத்தின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த 5-ம் தேதி தொடங்கியது. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பப்பதிவு நாளை (மே 8) துவங்குகிறது. மேலும் 12-ம் வகுப்பிற்குப் பின்னர் மாணவர்கள் என்ன படிக்கலாம் என்பதற்கான வழிகாட்டுதல் குழுவும் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details