தமிழ்நாடு

tamil nadu

'செப்.12ஆம் தேதி 10 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள்' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By

Published : Sep 5, 2021, 2:53 PM IST

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் வரும் 12ஆம் தேதி 10 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை:சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட மடுவின்கரை மாநகராட்சிப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர்கள், முதியவர்களுக்கு உதவித்தொகை, அரசின் நலத்திட்ட உதவிகளை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று (செப்.05) வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, ”கேரளாவில் 12 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் தாக்கியுள்ளது என்ற தகவல் கிடைத்தது. ஏற்கனவே அங்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபோது கேரளா- தமிழ்நாடு எல்லையில் காய்ச்சல் முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டன.

9 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு

இப்போது நிபா வைரஸ் எதிரொலியால் எல்லையோர ஒன்பது மாவட்டங்களில் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருபவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆவணம் சமர்பிக்க வேண்டும்.

ஒரே நாளில் 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சர்வதேச விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கேன், 13 நிமிடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவு அறிவிக்கும் கருவி ஆகியவை அளிக்கப்பட்டு சிறப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மூன்று கோடியே 50 லட்சத்து 20 ஆயிரத்து 70 பேருக்கு நேற்று (செப்.04) இரவு வரையில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக ஆறு லட்சத்து 20 ஆயிரத்து 225 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

ஒன்றிய அரசிடம் இருந்து இன்று (செப்.05) 19 லட்சத்து 22 ஆயிரத்து 80 டோஸ் தடுப்பூசிகள் வர உள்ளன. முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி செப்டம்பர் 12ஆம் தேதி தமிழ்நாட்டில் 10 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. நோய்த்தொற்று அதிகம் உள்ள ஒன்பது மாவட்டங்களில் கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாத வைரஸ்

பள்ளி, கல்லூரிகள் திறப்பால் இதுவரை பெருமளவில் நோய்த்தொற்று கண்டறியப்படவில்லை. நோய்த்தொற்று கண்டறியப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு நோய் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தபட்டுள்ளன. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் நன்றாக உள்ளனர்.

தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாத சி 1.2 வகை கரோனா வைரஸ் உலக அளவில் ஒன்பது நாடுகளில் பரவிய நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன " என்று கூறினார்.

இதையும் படிங்க: கேரளாவில் நிபா: எல்லைப்பகுதியை உஷாராக்கும் தமிழ்நாடு சுகாதாரத்துறை

ABOUT THE AUTHOR

...view details