கேரளாவில் நிபா: எல்லைப்பகுதியை உஷாராக்கும் தமிழ்நாடு சுகாதாரத்துறை

author img

By

Published : Sep 5, 2021, 11:30 AM IST

Updated : Sep 5, 2021, 1:28 PM IST

எல்லையை உஷாராக்கும் தமிழ்நாடு சுகாதாரத்துறை, நிபா வைரஸ், தமிழ்நாடு கேரளா எல்லை, tamilnadu kerala border

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்று அறிகுறியுடன் சிகிச்சைப் பெற்றுவந்த 12 வயது சிறுவன் உயிரிழந்ததை அடுத்து, தமிழ்நாடு - கேரளா எல்லைகளை தீவிரமாக கண்காணிக்க தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டு மாநில முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. அப்போது கோழிக்கோட்டில்தான், தென்னிந்தியாவில் முதன்முதலாக நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

தற்போது, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அதே மாவட்டத்தில் 12 வயது சிறுவன், நிபா வைரஸ் தொற்றின் அறிகுறிகளுடன் நேற்று (செப்.4) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அச்சிறுவன் இன்று (செப். 5) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு தொற்று பரவாமல் தடுக்க, தமிழ்நாடு - கேரளா எல்லையோர மாவட்டங்களில் ஜிகா, நிபா வைரஸ் தொற்று கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அச்சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாக தற்போது வரை கேரளா மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிபா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால், கடுமையான சுவாச தொற்று மற்றும் அபாயகரமான மூளையழற்சி நோய் பாதிப்பு ஏற்படவும், இறப்பு விகிதம் 40 முதல் 75 சதவீதம் என கூறப்படுகிறது.

அறிகுறிகள் என்னென்ன

இந்த வைரஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு நேரடியாகப் பரவும். எந்த சிகிச்சையும் அல்லது தடுப்பூசியும் இல்லை. நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உருவாகின்றன.

தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் தொண்டை புண் ஆகிய அறிகுறிகள் தென்படுகின்றன. மேலும் கடுமையான சுவாசக் கோளாறு உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகள் போன்றவையும் எற்படுகிறது என சுகாதரத்துறை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் நிபா: கேரளாவில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு

Last Updated :Sep 5, 2021, 1:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.