தமிழ்நாடு

tamil nadu

செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே ரவுடி மீது வெடிகுண்டு வீச்சு - மர்ம கும்பலை தேடும் காவல்துறை!

By

Published : Jul 6, 2023, 8:41 PM IST

செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே ரவுடி ஒருவரை நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்ய முயன்ற அடையாளம் தெரியாத ஐந்து பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

செங்கல்பட்டு:தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ். இவர் மீது தாம்பரம், ஓட்டேரி ஆகிய பகுதிகளில் கொலை, கொலை முயற்சி ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்காக அவர் அடிக்கடி நீதிமன்றம் செல்வது வழக்கம். அதன்படி அவர் மீது உள்ள வழக்கு ஒன்றுக்காக இன்று (ஜூலை 06) செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக லோகேஷ் சென்றார்.

நீதிமன்றத்திற்கு அருகே இருந்த கடை ஒன்றில் நின்று கொண்டிருந்தார். அப்போது, லோகேஷை அடையாளம் தெரியாத ஐந்து பேர் கொண்ட கும்பல் திடீரென சுற்றி வளைத்தது. தப்பி ஓடிய லோகேஷை இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்ற அடையாளம் தெரியாத ஐந்து பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் சிக்காத லோகேஷ் நீதிமன்றத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிற்கு ஓடி உள்ளார்.

லோகேஷை கொலை செய்யச் சென்ற கும்பல் அவர் மீது நாட்டு வெடி குண்டை வீசியது. இதில், 100 மீட்டர் தொலைவில் ஓடிக்கொண்டிருந்த லோகேஷ் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்னாலே விரட்டிச் சென்ற அந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், கீழே விழுந்து கிடந்த லோகேஷை சரமாரியாக வெட்டி விட்டு அப்பகுதியில் இருந்து தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், லோகேஷை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத், சம்பவ இடத்திற்குச் சென்று நேரில் விசாரணை மேற்கொண்டார்.

மேலும், இந்த கொலை முயற்சி சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். நீதிமன்றம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக வெடிகுண்டு கலாச்சாரம் சற்றே அடங்கி இருந்த நிலையில் தற்போது மீண்டும் வெடிகுண்டு கலாச்சாரம் தொடங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதியில் இது போன்ற சம்பவம் நடைபெற்றிருப்பது செங்கல்பட்டு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு இரும்புலியூரில் கொலை வழக்கில் 2 ஆவது முக்கிய குற்றவாளியாக லோகேஷ் சேக்கப்பட்டார். அதே கொலை வழக்கில் முதல் குற்றவாளியான பாஸ்கரை ஏற்கனவே கொலை செய்த நிலையில் தற்போது இரண்டாவது குற்றவாளியான லேகேஷை கொலை செய்யவே இந்த முயற்சி நடைபெற்றிருக்கலாம் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், பழிக்குப் பழியாக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா உள்ளிட்ட பல கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:விமானம் மூலம் கேரளா வந்து கொள்ளை.. ஹைகிளாஸ் திருடன் சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details