தமிழ்நாடு

tamil nadu

CSK vs MI: பதிலடி கொடுத்து முதல் இடத்திற்கு முன்னேறுமா மஞ்சள் படை!

By

Published : Sep 19, 2021, 4:01 PM IST

Updated : Sep 19, 2021, 4:13 PM IST

ஐபிஎல் தொடரின் இரண்டாவது கட்ட போட்டிகள் இன்று தொடங்கும் நிலையில், இன்றைய போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன.

CSK vs MI
CSK vs MI

துபாய்: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. சென்னை, மும்பை, டெல்லி, அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடைபெற்ற இத்தொடரில், கரோனா தொற்று பரவலை தடுக்க வீரர்கள், அணி நிர்வாகிகள் ஆகியோர் பயோ-பபுளில் தங்கவைக்கப்பட்டனர்.

சில காரணங்களால் பயோ-பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, தொடர் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

ப்ளே ஆஃப் சுற்றை நோக்கி...

இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள 27 லீக் போட்டிகள், 4 ப்ளே ஆஃப் சுற்று போட்டிகளை செப்டெம்பர் 19ஆம் தேதி (இன்று) முதல் அக்டோபர் 15ஆம் தேதிவரை அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவெடுத்தது.

இந்நிலையில், இன்று நடைபெறும் 30ஆவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது. இவ்விரு அணிகளும் இத்தொடரில் மொத்தம் 7 போட்டிகளை விளையாடி உள்ளது. இதில், சென்னை அணி ஐந்தில் வெற்றிபெற்று 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், மும்பை அணி நான்கில் வென்று 8 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளன.

முதல்கட்டப் போட்டிகளில், மும்பை அணியின் மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால், முதலில் மும்பை அணி சற்று தடுமாறியது. ஆனால், கடைசியாக நடந்த சென்னை அணியுடனான போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் முழுத்திறனை வெளிப்படுத்திய மும்பை அணி அசத்தலான வெற்றியைப் பதிவுசெய்தது.

தொடருமா மும்பையின் ஆதிக்கம்

சென்னை அணிக்கு இந்த தொடரில் மிகச் சரியாக அமைந்தது அதன் ஓப்பனிங் பாட்னர்ஷிப்தான். அதே அதிரடியை ரூதுராஜ், டூ பிளேசிஸ் இந்த முறையும் வெளிப்படுத்தினால் சென்னையின் ப்ளே ஆஃப் கனவு எளிதாகிவிடும். ஏறத்தாழ நான்கு மாதங்கள் கழித்து போட்டிகள் நடைபெறுவதால், அனைத்து அணிகளும் ஒரு புது சீசனில் விளையாட உள்ள மனநிலையில் உள்ளனர்.

இதனால், மைதானம் மட்டுமின்றி பிளேயிங் லெவனில் இருந்து அணியின் கட்டமைப்பே மாற வாய்ப்புள்ளது. எனவே, யார் ஆதிக்கம் செலுத்த போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சென்னை அணியை பொறுத்தவரை நட்சத்திர வீரர்கள் சாம் கரன், டூ பிளேசிஸ் ஆகியோர் இந்த போட்டியில் விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, சென்னை - மும்பை அணிகள், 32 போட்டிகளில் மோதி, மும்பை 19 போட்டிகளிலும், சென்னை 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

முதலிடம் பெறுமா சிஎஸ்கே

இத்தொடரின் முதல்கட்டப் போட்டியில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்க சென்னை அணியும், தொடரை வெற்றியுடன் தொடங்க மும்பை அணியும் இப்போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

இப்போட்டியில் சென்னை அணி வெற்றிபெறும்பட்சத்தில், புள்ளிப்பட்டியலில் டெல்லியை அணி பின்னுக்குத் தள்ளி சென்னை அணி முதலிடத்தை பிடிக்கும்

மேலும், 2019ஆம் ஆண்டுக்கு பிறகு ஐபிஎல் போட்டிகளைக் காண ரசிகர்கள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் பார்வையாளர்கள் இன்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் விராட்!

Last Updated :Sep 19, 2021, 4:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details