தமிழ்நாடு

tamil nadu

2-0 என தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா... 51 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி...!

By

Published : Nov 29, 2020, 5:21 PM IST

சிட்னி: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், 2-0 என்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

australia-beat-india-by-51-runs-and-won-the-series
australia-beat-india-by-51-runs-and-won-the-series

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் ஆரோன ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பின்னர் களமிறங்கிய ஆஸி. அணியில் அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆட, 50 ஓவர்களில் 389 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தவான் - அகர்வால் இணை தொடக்கம் கொடுத்தனர்.

போராடிய கோலி

இந்த இணை முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக ஆடி 58 ரன்களை சேர்த்தது. அப்போது தவான் 30 ரன்களிலும், அகர்வால் 28 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். பின்னர் விராட் கோலி - ஸ்ரேயாஸ் இணை நிதானமாக ரன்கள் சேர்த்தது.

இவர்களின் பார்ட்னர்ஷிப் 93 ரன்களை எடுக்க, ஸ்ரேயாஸ் ஐயர் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் முக்கியமான மூன்று வீரர்கள் நல்ல தொடக்கம் கிடைத்தும் பெரிய ஸ்கோரை அடிக்காமல் ஆட்டமிழந்து இந்திய அணி பெரும் பின்னடைவாக அமைந்தது.

இதையடுத்து விராட் கோலி - ராகுல் இணை சேர்ந்து ஸ்கோரை உயர்த்த தொடங்கியது. இதனிடையே விராட் கோலி அரைசதம் கடந்தார். 30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 186 ரன்களை எடுத்தது.

இதையடுத்து 20 ஓவருக்கு 205 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் விராட் கோலி - ராகுல் இணை அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தனர். இதனால் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி, ஹென்ரிக்ஸின் அபாரமான கேட்ச்சால் 89 ரன்களுக்கு வெளியேறினார்.

பின்னர் வந்த ஹர்திக் பாண்டியாவின் பேட்டில் பந்து சிக்கவில்லை. மறுபக்கம் ராகுல் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். இரு கட்டத்தில் ஓவருக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது.

அப்போது ஸாம்பா வீசிய ஓவரில் ராகுல் சிக்சர் அடிக்க நினைத்து 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் ஆஸி.யின் கைகள் ஓங்கியது. 45 ஓவர்களில் 304 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணிக்கு, கடைசி 5 ஓவர்களில் 86 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வந்தது.

அரைசதம் அடித்த ராகுல்

அப்போது ஸ்டார்க் வீசிய 46ஆவது ஓவரில் ஜடேஜா இரண்டு சிக்சர்களை அடிக்க, அந்த ஓவரில் 18 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஆனால் அடுத்த ஓவரிலேயே ஜடேஜா, ஹர்திக் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணியின் தோல்வி உறுதியானது.

இறுதியாக இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் எடுத்து, 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக கம்மின்ஸ் 3, ஹெசல்வுட் 2, ஸாம்பா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

3 விக்கெட்டுகள் வீழ்த்திய கம்மின்ஸ்

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி இரண்டு போட்டிகள் வென்றதையடுத்து, 2-0 என்று ஆஸி. தொடரைக் கைப்பற்றியது.

இதையும் படிங்க:ஆஸி. அணியின் 5 பேட்ஸ்மேன்கள் அரைசதம்... இந்திய அணியின் 5 பவுலர்களும் அரைசதம்...!

ABOUT THE AUTHOR

...view details