தமிழ்நாடு

tamil nadu

Ashes Test: இங்கிலாந்து அணிக்கு முதல் வெற்றி!

By

Published : Jul 10, 2023, 10:36 AM IST

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ashes test
ஆஷஸ் டெஸ்ட்

லண்டன்: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3வது ஆட்டம் லண்டன் லீட்ஸ் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. கடந்த 6ம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பெளலிங்கை தேர்வு செய்தது. அதன் பின் இறங்கிய ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 60.4 ஓவர்களில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் மார்ஸ் 17 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 118 ரன்கள் எடுத்து தனது அணிக்கு இக்கட்டான சூழ்நிலையில் கைகொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, களம் கண்ட இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 52.3 ஓவர்களில் 237 ரன்கள் மட்டுமே அடித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்கள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 26 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் 67.1 ஓவர்களில் 224 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

ஹெட் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து பெளலிங்கில் கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் தலா 3 விக்கெட்கள் எடுத்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 251 ரன்களை இலக்காக இங்கிலாந்து அணிக்கு நிர்ணயித்தது. இதனை அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி சனிக்கிழமை முடிவில் விக்கெட் ஏதுவுமின்றி 27 ரன்கள் சேர்த்திருந்தது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஆடிய ஆட்டத்தில் பென் டக்கெட் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்கள், மொயீன் அலி 5 ரன்களில் வெளியேறினர். மறுபக்கம் அரை சதத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜாக் கிராலிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 5 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

ஜோ ரூட் 3 பவுண்டரிகளுடன் 21 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 1 பவுண்டரியுடன் 5 ரன்கள் எடுத்து வெளியேறினர். மிடில் ஆர்டரில் களம் வந்த ஹேரி புரூக் வழக்கம் போல் இல்லாமல் சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு எடுத்துச் சென்றார். அதன் பின் 9 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்கிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார், ஹேரி புரூக். அதன் பின் இறங்கிய கிறிஸ் வோக்ஸ் 32 ரன்களும், மார்க் வுட் 16 ரன்களும் எடுத்து இங்கிலாந்து அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் 5 விக்கெட்கள் எடுத்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

4 நாட்களில் முடிவடைந்த இந்த டெஸ்டில், மொத்தமாக 7 விக்கெட்கள் எடுத்த இங்கிலாந்து பெளலர் மார்க் வுட் ஆட்ட நாயகன் ஆனார். மேலும், இந்த வெற்றியின் மூலம் கேப்டனாக 250+ இலக்கை ஐந்து முறை வெற்றி பெற்று தோனியை பின்னுக்குத் தள்ளினார், இங்கிலாந்தின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளும் மோதும் 4வது டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் தொடங்குகிறது.

இதையும் படிங்க:பணக்கார கிரிக்கெட் வீரர் யார்? டோனியா.. கோலியா.. இல்ல சச்சினா..? யார் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details