தமிழ்நாடு

tamil nadu

விஜயகாந்த் நினைவிடத்தில் சிவராஜ்குமார் அஞ்சலி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 12:14 PM IST

பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின், அவரது மனைவி பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் கூறினார்.

கன்னட நடிகர் சிவராஜ் குமார் மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி
கன்னட நடிகர் சிவராஜ் குமார் மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி

சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை தீவுத்திடலில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. பின்னர் கடந்த 29ஆம் தேதி தேமுதிக அலுவலகத்தில், அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், ராதா ரவி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர் அஜித், விஜயகாந்த் குடும்பத்தாருக்கு வாட்ஸ் அப் மூலம் ஆறுதல் தெரிவித்தார்.

விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய ரஜினிகாந்த், “மனம் மிகவும் கனமாக உள்ளது. நட்புக்கு இலக்கணம் விஜயகாந்த், அவருடன் ஒருமுறை பழகிவிட்டால் வாழ்க்கை முழுக்க அவரை மறக்கவே முடியாது. அவரது அன்புக்கு அடிமையாகி விடுவார்கள். அவர் யார் மீது கோபப்பட்டாலும், அந்த கோபத்தில் ஒரு நியாயம் இருக்கும்.

நான் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது என்னை பார்க்க வந்தார். அப்போது வெளியில் கூடியிருந்த கூட்டத்தை ஐந்து நிமிடத்தில் கலைத்தார். விஜயகாந்த் நல்ல உடல் பலம் கொண்ட மனிதர். அவரை கடைசி நாட்களில் இப்படி பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருந்தது” என பேசினார்.

விஜயகாந்த் இறந்தபோது நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நடிகர்கள் தற்போது அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று சூர்யா, ஜெயம் ரவி ஆகியோர் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சூர்யா பேசுகையில், "அண்ணனின் பிரிவு மிகவும் கஷ்டமாக உள்ளது.

பெரியண்ணா படத்தில் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 10 நாட்கள் அவருடன் இருந்தேன். என்னை அன்பாக பார்த்துக் கொண்டார். அந்த பத்து நாட்கள் அவரை பிரம்மிப்புடன் பார்த்தேன். மிகப்பெரிய நடிகராக இருந்தும், அவரை மிக எளிதாக அணுகும் நிலையில் இருந்தார்.

அவரது இறுதி அஞ்சலியின்போது அவருடைய முகத்தை பார்க்க முடியாமல் போனது எனக்கு மிகப்பெரிய இழப்பு” என்றார். இந்நிலையில், பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார், இன்று தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்குச் சென்ற சிவராஜ்குமார், விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிற்கு ஆறுதல் கூறினார்.

இதையும் படிங்க:“எங்கள் பெரியண்ணா..” விஜயகாந்த் நினைவிடத்தில் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி!

ABOUT THE AUTHOR

...view details