தமிழ்நாடு

tamil nadu

தங்கமாக மாறும் வலம்புரி சங்கு... சதுரங்க வேட்டை பாணியில் மோசடி: 7 பேர் கைது

By

Published : Aug 28, 2021, 2:14 PM IST

வலம்புரி சங்கு

வலம்புரி சங்கை அரிசியில் வைத்தால் அனைத்தும் தங்கமாக மாறும் எனக் கூறி இரண்டு கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற ஏழு பேரை காவல் துறையினர் சுற்றிவளைத்து கைதுசெய்தனர்.

திருவண்ணாமலை: மனிதனின் ஆசையைத் தூண்டி நூதன முறையில் பணம் பறிக்கும் கும்பலின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. தற்போது வலம்புரி சங்கை வைத்து நூதன முறையில் பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர்.

வலம்புரி சங்கை வைத்திருப்பவர்கள் பெரும் செல்வந்தர்கள் ஆகிவிடுவார்கள். சங்கின் மீது பால் ஊற்றினால் தயிராகும், அரிசியில் வைத்தால் தங்கமாகிவிடும், பூஜை அறையில் இருந்தால் பணம் கொட்டும் எனக்கூறி சதுரங்க வேட்டை பட பாணியில், பலர் இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் ஏமாந்துள்ளனர்.

பரணி விரித்த வலை

அதன்படி, இந்த ஏமாற்று கும்பல் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வேப்பூர்செக்கடி கிராமத்தைச் சேர்ந்த பரணி (46) என்பவருக்குத் தொலைபேசி மூலம் அழைத்துள்ளது.

தங்களிடம் அபூர்வமான வலம்புரி சங்கு உள்ளது. அதனை விற்பனை செய்யவுள்ளோம். விற்பனை செய்து தந்தால் பல லட்ச ரூபாய் தரகுத் தொகையாகத் தருகிறோம் என்று கூறியுள்ளது அக்கும்பல். மேலும், தாங்கள் கிரிவலப்பாதையில் காத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனாவ் சந்தேகமடைந்த பரணி திருவண்ணாமலை தாலுகா காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாலுகா காவலர்கள் கிரிவலப் பாதையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

வலம்புரி சங்கு

அப்போது, நள்ளிரவு ஒரு மணியளவில் அந்த இடத்திற்கு ஒரு கார் வந்தது. அதில் இருந்தவர்கள் பரணியை ஏற்றிக்கொண்டு, காருக்குள் வைத்து வலம்புரி சங்கு எனக்கூறி ஒரு சங்கை காண்பித்தனர். அதன் விலை சுமார் இரண்டு கோடி ரூபாய் எனக் கூறியுள்ளனர்.

ஆனால் அதனைப் பார்த்தபோது, மிகச் சாதாரணமான சங்கு எனத் தெரியவந்தது. இதையடுத்து அங்கு மறைந்திருந்த காவல் துறையினர் காரில் வந்தவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

மோசடி கும்பல்

விசாரணையில், திருவண்ணாமலை வ.உ.சி. நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் (52), புதிய கார்கானா தெருவைச் சேர்ந்த தீபக் (53), ராணிப்பேட்டை சிப்காட்டைச் சேர்ந்த சதீஷ் (22), வேட்டவலத்தைச் சேர்ந்த உமாசங்கர் (36), செஞ்சி தாலுகா ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த அரசு (50), செங்கம் அடுத்த அரியாங்குப்பத்தைச் சேர்ந்த ராம்குமார் (32), திருவண்ணாமலை பேய் கோபுர தெருவைச் சேர்ந்த அஸ்வத்தாமன் (28) ஆகிய ஏழு பேரும் வலம்புரி சங்கு எனக் கூறி சாதாரண சங்கை விற்று பணம் மோசடி செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.

அவர்களைக் கைதுசெய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்த காரைப் பறிமுதல்செய்தனர். தொடர்ந்து இதுபோன்று வேறு ஏதேனும் நபர்களை ஏமாற்றியுள்ளனரா என்று காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details