தமிழ்நாடு

tamil nadu

இல்லாத கண்மாயில் தடுப்பணை கட்டியதாக இணையதளத்தில் பதிவு - முறைகேடு குறித்து விசாரிக்கக்கோரி வழக்கு!

By

Published : Jul 29, 2021, 5:38 PM IST

பனங்குடி கிராமத்தில் தடுப்பணை முறைகேடு குறித்து விசாரிக்கக்கோரிய வழக்கில் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் தடுப்பணையை ஆய்வு செய்வதோடு மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai highcourt
madurai highcourt

மதுரை:பொது மக்களின் வரிப்பணம் முறையாகப் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டு இருப்பது தெரியவருவதால், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் அளிக்கும் அறிக்கையின்படி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவகங்கை மாவட்டம், நடராஜபுரத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில்,'பனங்குடி கிராமத்தில் 1 ஊரணி, 17 கண்மாய்கள் உள்ளன. இந்த கிராமத்தினர் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

பனங்குடி கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ், 4.6 லட்சம் மதிப்பீட்டில் வீரையன் கண்மாயில் தடுப்பணை கட்டப்பட்டதாக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு 2020 அக்டோபர் 14ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டதாகவும், இதற்காக 16 நபர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், மூன்று மாதங்களில் பணிகள் நிறைவடைந்ததாகவும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பனங்குடி கிராமத்தில் 18 கண்மாய்கள் உள்ள நிலையில் வீரையன் கண்மாய் எனும் பெயரில் எந்த கண்மாயும் இல்லை.

ஆனால், அந்த கண்மாயில் தடுப்பணை கட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜா, தவசு, பிரபு ஆகிய மூவரும் தடுப்பணை கட்டுமான பணியில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விசாரித்த போது பனங்குடி பஞ்சாயத்து எழுத்தர் முறைகேட்டில் ஈடுபட்டு தடுப்பணை கட்டுவதற்கான பணத்தை எடுத்துக் கொண்டது தெரியவந்தது.

பனங்குடி பஞ்சாயத்து எழுத்தர் 2000 ஆம் ஆண்டு முதல் 21 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகிறார். பனங்குடி அவரது சொந்த ஊர். 21 ஆண்டுகளாக இது போல பல திட்டங்களில் முறைகேடுகள் செய்து பொதுப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக கிராமத்தினருடன் மாவட்ட ஆட்சியரிடமும், முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

எனவே வழக்கறிஞர் ஆணையரை நியமித்து வீரையன் கண்மாய் குறித்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டதாகக் கூறப்படும் தடுப்பணை குறித்து ஆய்வு செய்யவும், முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்' என மனுவில் கோரியிருந்தார்.

இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இவ்வழக்கை பொறுத்த வரை பொது மக்களின் வரிப்பணம் முறையாகப் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டு இருப்பது தெரியவருகிறது.

இவ்வழக்கு குறித்து, ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் வீரையன் கண்மாயில் தடுப்பணை கணக்குகளை ஆய்வு செய்வதோடு, தடுப்பணையை நேரடியாகச் சென்று ஆய்வு செய்து அறிக்கையை சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் அறிக்கையின்படி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிக்கலாமே: தந்தை-மகன் மரண வழக்கு: 9 காவலர்கள் மீது கூட்டுச்சதி பிரிவில் வழக்குப்பதிய கோரி மனு

ABOUT THE AUTHOR

...view details