தமிழ்நாடு

tamil nadu

சோளிங்கர் நரசிம்மர் கோயிலில் அடிப்படை வசதிகள் : அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை

By

Published : Dec 10, 2021, 9:04 AM IST

சோளிங்கர் நரசிம்மர் கோயிலுக்கு ரோப்கார் சேவை தயார்

சோளிங்கர் நரசிம்மர் மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல ஏதுவாக ரோப்கார் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அமைச்சர் காந்தி ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான யோக நரசிம்மர் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு படிகள் வழியாக மட்டுமே செல்ல முடியும்.

மலை மீது 1,305 படிகளை கடந்து சென்று அமிர்தவள்ளி தாயார் சமேத யோக நரசிம்மரை தரிசனம் செய்ய முடியும். செங்குத்தான மலை மீது படிகள் அமைக்கப்பட்டுள்ளதால் வயதானவர்கள் சுவாமி தரிசனம் செய்ய சிரமப்பட்டு வருகின்றனர்.

சோளிங்கர் நரசிம்மர் மலைக்கோயில்

1,305 படிகள் கொண்ட மலை கோயில் என்பதால், மலை ஏற இயலாத பக்தர்களை டோலி மூலம் தொழிலாளர்கள் சுமந்து சென்று வந்தனர். ரோப்கார் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பக்தர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தனர்.

. அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை

இதனையடுத்து, கடந்த 2006ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட ரோப் கார் பணிகள், 2014 ஆம் ஆண்டில் ரூ. 9 கோடியே 50 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டது நிறைவு பெறாமல் இருந்தது.

ரோப்கார் வசதி

இந்நிலையில், கடந்த ஜூன் 11ம் தேதி நேரில் சென்று ஆய்வு செய்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, பணிகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து, ஜூன் 26 ஆம் தேதி சிறப்பு பூஜை நடத்தப்பட்டு உதவி ஆனையர் ஜெயா முன்னிலையில் கேபிளின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய ரோப்கார் சோதனை ஒட்டம் நடத்தப்பட்டது.

அடிப்படை வசதிகள்

இந்தநிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் சோளிங்கர் இலட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோயிலில் ரோப்கார் ( கம்பிவட ஊர்தி சேவை )அமைவிடத்தில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி ஆகியோர் தலைமையில் நேற்று முன்தினம் (டிச.8) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சோளிங்கர் நரசிம்மர் மலைக்கோயில்

திருக்கோயிலுக்கான பெருந்திட்டம்

இந்த ஆய்வுக் கூட்டத்தில் திருக்கோயிலுக்கான பெருந்திட்ட வரைவு (Master Plan) விளக்கப்படம் மூலம் விவாதிக்கப்பட்டது. இத்திருக்கோயிலில் ரோப்கார் அமைவிடத்தில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து விளக்கப்படம் மூலம் விவாதிக்கப்பட்டது. குறிப்பாகப் பக்தர்கள் காத்திருப்பு கூடம், பொருட்கள் பாதுகாக்கும் அறை, கட்டணச்சீட்டு கூடம், குடிநீர், கழிப்பறை, வாகனம் நிறுத்துமிடம், பூஜை பொருட்கள் விற்பனை நிலையம், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் நன்கொடையாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.

சோதனை ஓட்டம்

பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல ஏதுவாக ரோப்கார் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இப்பணிகள் அனைத்தும் விரைவில் முடித்து பக்தர்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் பி. சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் சி.ஹரிப்ரியா, இணை ஆணையர் ஜெயராமன், திருக்கோயில் உதவி ஆணையர் ஜெயா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:மலைக்கோயில்களில் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் ரோப் கார் - சேகர்பாபு தகவல்

ABOUT THE AUTHOR

...view details