தமிழ்நாடு

tamil nadu

தரமற்ற உணவு வழங்கினால் உணவகங்களின் ஒப்பந்தங்கள் ரத்து - அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்

By

Published : Jan 25, 2022, 5:13 PM IST

Minister RS Raja Kannappan warns government bus routes restaurants
அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்

அரசு பேருந்துகள் நின்று செல்லும் வழிகளில் தரமற்ற உணவு வழங்கினால் கட்டாயம் உணவகங்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை: பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் பேரில் தரமற்ற உணவு வழங்கிய மாமண்டூர் (செங்கல்பட்டு) பயண வழி உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நின்று செல்லும் பயண வழி உணவகங்கள், கடைகளில் தரமற்ற உணவுகள் வழங்குவதாகவும், கூடுதல் விலை இருப்பதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு புகார்கள் வந்துள்ளன.

மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட்க்கு சொந்தமான, எம்.எஸ் ஸ்டார் அசோசியேஷன் (M/S Star Associates Salem) ஒப்பந்ததாரர் நடத்தும் மாமண்டூர் பயண வழி உணவகம், கடைகளில் உணவின் தரம் குறைவாகவும், விலை அதிகமாகவும் இருப்பதாக பல்வேறு புகார்கள் பெறப்பட்டுள்ளது.

இது குறித்து கடந்தாண்டு டிசம்பர் 29ஆம் தேதியன்று ஆய்வு மேற்கொண்ட கழக அலுவலர்கள், உணவு சுகாதாரமின்றி தரமற்றதாக உள்ளது. அனைத்து உணவுப் பொருள்களும் விற்பனை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.

இக்குறைகளை சுட்டிக்காட்டி அதனை நிவர்த்தி செய்து, விபரத்தை தெரிவிக்குமாறு கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதியன்று புகார் அறிக்கை எம்.எஸ் ஸ்டார் அசோசியேஷன் ஒப்பந்ததாரருக்கு அனுப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், கடந்த ஜனவரி 20ஆம் தேதியன்று கழக அலுவலர்கள் மீண்டும் ஆய்வு மேற்கொண்டனர். இதே குற்றங்கள் மீண்டும் தொடர்ந்த நிலையில், அதேபோல் கடந்த ஜனவரி 21ஆம் தேதியன்று புகார் அறிக்கையை அதே நிறுவன ஒப்பந்ததாரருக்கு அனுப்பப்பட்டது.

இதற்கு பதில் ஏதும் வராத காரணத்தினால், இன்று (ஜன.25) விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கண்ட போது, அந்த உணவகம் குறைபாடுகள் ஏதும் சரி செய்யாத நிலை கண்டறியப்பட்டது. இதுகுறித்த ஆய்வறிக்கையானது போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனிடன் சமர்பிக்கப்பட்டது.

இதுகுறித்து அமைச்சர், “அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகள் இன்று(ஜன.25) காலை முதல் மாமண்டூர் சாலை வழி உணவகத்தில் நின்று செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் உடனடியாக மேற்கண்ட எம்.எஸ் ஸ்டார் அசோசியேஷன் ஒப்பந்ததாரர் அவர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்து தரமான உணவு வழங்கும் ஒப்பந்ததாரரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் அரசு பேருந்துகள் நின்று செல்லும் பயண வழி உணவகங்கள் அனைத்திலும் ஆய்வுகள் நடத்தப்படும். தரம் குறைவாக உணவு, கூடுதல் விலைக்கு வழங்கும் உணவகங்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும். தரமான உணவு, குறைந்த விலையில் உணவு வழங்கும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: “இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்” - ஸ்டாலின் கடிதம்

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details