தமிழ்நாடு

tamil nadu

மரபணுவின் மூலம் மார்பகப் புற்றுநோய் வருவதையும் தடுக்கலாம் - மருத்துவர்களின் பிரத்யேகப்பேட்டி

By

Published : Oct 10, 2022, 10:17 AM IST

Updated : Oct 10, 2022, 1:06 PM IST

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மாறுபட்ட உணவு முறைகள் மற்றும் மரபணு மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் பெண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோய் குறித்து இந்த செய்திக்கட்டுரையில் காணலாம்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: மரபணுவின் மூலம் மார்பக புற்றுநோய் வருவதையும் தடுப்பதற்கான பரிசோதனைகளை முன்கூட்டியே செய்தால் தடுக்க முடியும் என கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்திமலர், மருத்துவர் அனிதா தெரிவித்தனர்.

புற்றுநோய் என்பது அசாதாரண உயிரணுப் பிரிவால் வகைப்படுத்தப்படும் மோசமான நோய். உடலில் உள்ள கோடிக்கானக்கான செல்களில் ஆரோக்கியமான செல்கள் உடலின் தேவைக்கேற்ப வளர்ந்து பிரிவதுடன், நாம் வயதாகும்போது அல்லது சேதம் ஏற்படுகையில், இந்த செல்கள் இறந்து புதிய செல்களால் உருவாக்கப்படுகின்றன. புற்றுநோய் ஒருவருக்கு வந்தால், பழைய மற்றும் சேதமடைந்த செல்களை அழிப்பதற்கு பதிலாக, அவை தேவையில்லாதபோதும் உயிர் வாழ்ந்து புதிய செல்களை உருவாக்குகின்றன. அவ்வாறு வளரும் கூடுதல் செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் பிரிந்து கட்டிகளை ஏற்படுத்துகின்றன.

எல்லா கட்டிகளும் புற்றுநோயாகாது:பெண்களை அதிகமாக பாதிக்கும் நோய்களில் மார்பக புற்றுநோயும் இடம் பெற்றுள்ளது. ஆரம்ப கட்டத்தில், மார்பக புற்றுநோய் எந்த அறிகுறிகளையும் காட்டாது. மார்பகங்களில் கண்ணுக்கு தெரியும் மாற்றங்கள் ஏற்பட்டாலோ அல்லது மார்பில் கட்டி போல உறுதியாக தோன்றினால் கூட, புற்றுநோய் பாதிப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் பெரிதாகத் தோன்றாது. ஆனாலும், மார்பக புற்றுநோயாளிகளில் பலருக்கு கட்டி இருப்பது உண்மைதான் என்றாலும், எல்லா கட்டிகளும் புற்றுநோயாக இருப்பது இல்லை. இதனால், பிற அறிகுறிகளையும் அறிந்து கொள்வதுடன், பரிசோதனைகளை ஆரம்பக்கட்டத்திலேயே மருத்துவர்களின் ஆலோசனைப் படி செய்து, சிகிச்சை பெறுவதும் சிறந்ததாகும்.

அறிகுறிகளும் எச்சரிக்கையும்:மார்பக புற்றுநோயின் அறிகுறிகளில் மிகவும் பொதுவான எச்சரிக்கை மார்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் கட்டி. இது உங்கள் மார்புச் சுவருடன், அக்குள் பகுதி வரை ஏற்படலாம். மார்பகங்களில் முலைக்காம்பில் இரத்தப்போக்கு அல்லது வலி ஏற்படலாம். மார்பகத்தின் எந்தப் பகுதியிலும் சிவந்து போதல் அல்லது வீக்கம் இருக்கலாம்.

மார்பகத்தில் வலியற்ற கட்டி பொதுவாக மார்பக புற்றுநோயின் முதல் அறிகுறியாகும். அதற்கு பதிலாக, ஸ்கிரீனிங் மேமோகிராம் மூலம் பல கட்டிகள் கண்டறியப்படுகின்றன. நோயறிதலின் போது, ​​பெரும்பாலான பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் வெளிப்படையான அறிகுறிகள் இல்லை.சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ரேடியோலாஜித்துறையில் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான மேமோகிராம் கருவி பொருத்தப்பட்டு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு: இதுகுறித்து நேற்று (அக்.9) கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் சாந்திமலர் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் அளித்த பேட்டியில், 'அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் 600 முதல் 650 பேரை கடந்தாண்டு பரிசோதனை செய்த போது, 21 பேருக்கு மேமோகிராம் மூலம் கண்டறியப்பட்டது. அவர்களுக்கு முதலில் தசை பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டு, அதன் பின்னர் அவர்களின் நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் பொது அறுவை சிகிச்சை துறையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பெண்களுக்கு ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தினால், மார்பகங்களில் கட்டிகள் இருக்கும். அதனை கண்டு சிலர் பயப்படுவார்கள். சிலர் வழக்கமாக வரும் கட்டி என கருதுவார்கள். அது போன்று இல்லாமல் அவர்களாவே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாற்றங்கள் தெரிந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று ஆலோசனைப் பெற்று சிகிச்சை பெறலாம்.

3Dமேமோகிராம் சோதனை:பெண்களில் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக சுயபரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் 3D மேமோகிராம் பரிசோதனைக்கு கட்டாயம் வர வேண்டும். மேலும் ஏற்கனவே, வீட்டில் உள்ளவருக்கு புற்றுநோய் இருந்தால், 30 வயதில் இருந்தே மேமோகிராம் பரிசோதனை செய்தால், சிறிதளவு கட்டி இருந்தாலும் அடையாளம் கண்டறிந்து, மார்பகத்தில் கட்டியை மட்டும் அகற்றி விட்டு, அவர்களுக்கு இயல்பான வாழ்க்கையை கொண்டு வர முடியும்.

ஆரம்பக்கட்டத்திலேயே பரிசோதனை என்பதையும், பெண்கள் நாட்டின் கண்கள் என்பதால் கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி பொது அறுவை சிகிச்சைத்துறையின் மூலம் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை செய்யப்படுகிறது. பெண்களுக்கு 30 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு புற்று நோய் வருவதற்கு அவர்களின் குடும்பத்தில் உள்ளவருக்கு இருந்தால் மரபணு மூலம் வருவதற்கு கட்டாயம் வாய்ப்புள்ளது. எனவேதான், முன்கூட்டியே வந்து பரிசோதனை செய்ய வேண்டும் என கூறுகிறோம்.

சுய பரிசோதனை தேவை:ஒவ்வொரு மாதவிடாய்க்குப் பின்னும் மார்பக பரிசோதனையை மேற்கொள்ளும்போது, எந்தவிதமான மாற்றமும் தெரியாவிட்டால் பிரச்சனை இல்லை. மார்பகத்தின் ஒருபகுதி மட்டும் கனமாக இருந்தாலும், கட்டி தென்பட்டாலும் பரிசோதனை செய்ய வேண்டும். உணவு பழக்கவழக்கத்தாலும் முன்கூட்டியே மாதவிடாய் அடைகின்றனர். இது போன்ற காரணங்களாலும், புற்றுநோய் தாக்கம் ஏற்படுகிறது.

மரபணுவின் மூலம் மார்பக புற்றுநோய் வருவதையும் தடுக்கலாம்

ஒழுங்கற்ற மார்பக விளிம்புகளுடன் கடினமாக இருக்கும் கட்டியாகவோ, ஒன்று அல்லது இரண்டு மார்பகங்களிலும் வீக்கம், சிவந்து போவது அல்லது திரவம் போல் வடித்தல் போன்றவை காணப்படும். கண்ணாடி முன்னர் நின்று, தோல் கலர் மாற்றம் ஏற்படுகிறதா? அரிப்பு ஏற்படுகிறதா? என்பதை சுய பரிசோதனை செய்ய வேண்டும். ஆரம்ப நிலையில் பரிசோதனை செய்து கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குணப்படுத்த முடியும். அதுவே, அடுத்த நிலைக்கு சென்றால் குணப்படுத்துவது சிரமமாக இருக்கும்' என்றார்.

கர்ப்பிணிகள் கவனத்திற்கு: அரசு கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் அனிதா கூறும்போது, 'பெண்களுக்கு 40 வயதிற்கு மேல் மார்பக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆனால் பெண்கள் கருவுற்று இருக்கும்போதும், மார்பகத்தில் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, பெண்கள் கருவுற்று இருக்கும் போதும் பெண்கள் தங்களின் மார்பகங்களை சுய பரிசோதனை செய்வதுடன், மருத்துவரிடமும் சென்று பரிசோதனை செய்துகொள்வது சிறந்தது.

குடும்பத்தில் யாருக்காவது புற்றுநாேய் இருப்பவர்களும் கவனமாக இருந்துகாெள்ள வேண்டும். கருவுற்று இருக்கும்போது மார்பக புற்றுநோய் வந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சைப் பெறவேண்டும். ஆரம்பக் காலத்தில் மக்களிடம் இருந்து சில நோய்கள் குறித்து மக்கள் வெளியில் சொல்வதற்கு அச்சப்பட்டு கொண்டு இருக்கின்றனர்.

ஆனால், அது போன்று அச்சப்படத்தேவையில்லை. தற்பொழுது சிகிச்சை முறைகளும், மருந்துகளும் இருப்பதால், உங்கள் நலன், குடும்பத்தினர் நலனை கருத்தில் கொண்டு சிகிச்சையை பெறவேண்டும். புற்றுநோய் நிலையை பொருத்தே சிகிச்சை முறையை முடிவு செய்வார்கள். புற்றுநோய் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுபோல் தெரிகிறது. இதற்கு மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணவர்வாகவோ, உணவு பழக்கவழக்கத்தில் ஏற்படும் மாற்றமாகவோ இருக்கலாம்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'அலுவலர்கள் தகவல்களைத்தரமாட்டார்கள்...ஆர்டிஐ சட்டம் மூலம் போராடித்தான் பெற வேண்டும்'

Last Updated : Oct 10, 2022, 1:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details