ETV Bharat / state

'அலுவலர்கள் தகவல்களைத்தரமாட்டார்கள்...ஆர்டிஐ சட்டம் மூலம் போராடித்தான் பெற வேண்டும்'

author img

By

Published : Oct 10, 2022, 6:53 AM IST

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் அலுவலர்கள் தானாக தகவல்களைத் தர மாட்டார்கள் எனவும், பொதுமக்கள் தான் போராடி தகவல்களைப் பெற வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் சுரேஷ் தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தகவல் அறியும் உரிமைச்சட்டம் அமலுக்கு வந்த இந்த வாரத்தை கொண்டாடும் வகையில், 1000 இடங்களில் RTI பயிற்சி என்னும் விழிப்புணர்வு பரப்புரையினை அறப்போர் இயக்கம் சர் பிட்டி தியாகராயர் அரங்கில் தொடங்கியது. மேலும் வந்திருந்தவர்களுக்கு அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் ரமேஷ், மாநிலக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் விழிப்புணர்வு பயிற்சி வழங்கினர்.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்து மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் தேசிய பொதுச்செயலாளரும், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான வி. சுரேஷ் கூறும்போது, 'தமிழ்நாட்டில் 1000 இடங்களில் பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும் என அறப்போர் இயக்கம் இப்பயிற்சியினை தொடங்கியுள்ளது. இது வரவேற்கத்தக்கது. தகவல் அறியும் சட்டம் மற்றச்சட்டங்களைப்போல் சாதாரண சட்டம் அல்ல. மக்களின் உரிமைக்களுக்கான சட்டம். தகவல் அறியும் உரிமைச்சட்டம் தானாக வந்தது கிடையாது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஏழைப்பெண்கள் சிலர் தங்களின் உரிமைகளைப் பெறுவதற்காக 10 ஆண்டுகள் தொடர்ந்து போராடி, வழக்குகளை சந்தித்து, சிறைக்குச்சென்றும், அவர்களில் சிலர் இறந்தும்விட்டனர். அதுபோன்ற பின்னணியில் தான் கொண்டுவரப்பட்டது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் அடிப்படைத்தன்மை 3 வகையாக இருக்கிறது. ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என கூறப்பட்டாலும், தமிழ்நாட்டில் மக்களாட்சி என்பது இல்லாமல் இருக்கிறது.

உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் வி. சுரேஷ்

நம் நாட்டில் உள்ள அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் தகவல் மக்களுக்கானது அல்ல எனவும், நாங்கள் கொடுக்கமாட்டோம் எனவும் கூறித்தான் வாழ்ந்து வந்தனர். அதை எதிர்த்து போராடி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பெண்கள் உரிமைக்குரல் எழுப்பினர். அவர்களின் அடிப்படை கோரிக்கையாக அரசாங்கம் எங்களுக்கு செய்யும் திட்டங்கள், செயல்கள் அனைத்து எங்களின் நிதி. அரசாங்கம் செயல்படும் அனைத்து தகவல்களும் பொது மக்களுடையது.

எனவே, அதனை தடுப்பதற்கு அரசாங்கத்தின் அலுவலர்கள் யார் என கேள்வி எழுப்பினர். அதன் அடிப்படையில் தான் இந்த சட்டம் வந்தது. தகவல்களைப்பெறுவது என்பது அடிப்படை உரிமையாகும். தலைமைச் செயலாளர் முதல் அலுவலக ஊழியர்கள் வரை யாரும் தகவல்களை தர மாட்டேன் எனக் கூறுவதற்கு உரிமைக்கிடையாது. சட்டத்தில் எந்த இடத்தில் கொடுக்கக்கூடாது என்பதை கூறலாமே தவிர, அடிப்படையில் தகவல்களை அளிக்க வேண்டும்.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் தகவல்களை கேட்கும்போது, எதற்காக கேட்கிறோம் என்பது குறித்து தெரிவிக்கத் தேவையில்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மனு போடும்போது , எதற்காக கேட்கிறோம் என்பதை சொல்லத் தேவையில்லை.

எனக்கு இந்த விவரத்தைக் கொடுங்கள் எனக்கூறினால் மட்டும் போதுமானது. அலுவலர்கள் மனு போட்டு தகவல் கொடுக்க வேண்டும் என்பது இல்லாமல், அலுவலர்கள் அந்தத்துறையில் இருக்கும் விவரங்களை தாங்களாகவே முன்வந்து தெரிவிக்க வேண்டும். சட்டத்தில் அலுவலர்கள் தகவல்களை தானாக தர வேண்டும் என இருந்தாலும், எங்களின் தகவல்களை நாங்கள் ஏன் கொடுக்க வேண்டும் என்ற மனநிலையில் தான் இருக்கின்றனர்.

சட்டத்தில் என்ன கூறினாலும், அது வெறும் பேப்பரில் இருக்கும் பேனா மை ஆகத்தான் போய்விடும். அந்த உரிமையை பெறுவதற்கு நாம் களத்தில் இறங்கி கோரிக்கை விடாவிட்டால், அதன் பயன்கிடைக்காது. அறப்போர் இயக்கம் இந்தாண்டு 1000 இடங்களில் பயிற்சி நடத்துவது என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் அறியும் சட்டம் அடிப்படை உரிமைகளையும், ஜனநாயகத்தையும் நிலை நாட்டக்கூடிய முக்கியமான ஒரு சட்டம் என்ற உணர்வு வந்தால், ஜனநாயத்தை வலுப்படுத்த முடியும்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல்களை அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தாலும், மக்கள் களத்தில் இறங்கிப்போராடினால் தான் தகவல் கிடைக்கும். அலுவலர்கள் தர மறுத்தால் உயர் நீதிமன்றத்திற்கு சென்றும் பெற முடியும். அலுவலர்களிடம் சென்று கேட்காவிட்டால், தங்களின் சொந்த வீட்டுத் தகவல் போல் தான் வைத்துள்ளனர். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் சில தகவல்களைத் தர வேண்டாம் என கூறியுள்ளனர். அதனைத் தவிர, பிற தகவல்களை தர மறுப்பது என்பது குற்றமாகும். தகவல்களைப் பெறுவதற்கு போராடித்தான் வெல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அறப்போர் இயக்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, 'தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மனு அளித்தால் 30 நாட்களில் பதில் அளிக்க வேண்டும். பதில் வராவிட்டால் முதல் மேல்முறையீடு செய்ய வேண்டும். 45 நாட்களில் வராவிட்டால் தகவல் அறியும் ஆணையத்திற்கு மனு அளிக்க வேண்டும். ஆணையத்தில் மனு அளித்தாலும், நிறைய சிக்கல்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. தகவல் தராத அலுவலர்கள் மீது தண்டனை விதிக்கவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் கூற முடியும்.

அறப்போர் இயக்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன்

பிரிவு 20-ல் 250 ரூபாய் முதல் 25ஆயிரம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்க முடியும். அவசியமான,தேவையான தகவல்களை தேவையற்றக் காரணங்களை வைத்து தராமல் இருந்தால், ஆணையத்திற்கு மேல் முறையீட்டிற்கு செல்லும்போது, அவர்கள் மீது அபராதம் விதிக்கவும், பொறுப்பற்ற முறையில் நடந்துகாெண்டதால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் கூற முடியும்.

ஊரக உள்ளாட்சித்துறை என்பது பல கோடி புழங்கிக்கொண்டு இருக்கும் ஒரு துறை. அதில் பல மட்டங்களை கடந்து தான் ஊருக்குள் திட்டங்கள் வருகிறது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மனு அளித்துவிட்டு மட்டும் இருக்காமல், ஆணையத்திற்கு நேரில் சென்றோ, கோரிக்கை கடிதம் அனுப்பியோ தொடர்ந்து செயல்பட வேண்டி உள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் ஒரு மனுவை மட்டும் போட்டு, அதனைப் பின் தொடராமல், அதனுடன் தொடர்புடைய டெண்டர் உள்ளிட்ட பிற காரணிகளையும் தொடர்ந்து பின்பற்றி தகவல்களைச் சேகரிக்க வேண்டும்.

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் முரண்பாடுகளுடன், தகவல்களை அளிக்க முடியாமல் தவித்துக்கொண்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது. மாற்றுத்திறனாளிகள், பட்டா மாறுதல், பெண்களுக்கான திட்டங்கள் குறித்த விவரங்களைத் தர முடியாமல் தவிக்கின்றனர். கிராம அளவில் பஞ்சாயத்திற்கு சென்று அங்குள்ள ஆவணங்களை பார்வையிட்டு, அதன் நகலைப் பெற முடியும்.

அந்த ஆவணங்களைத் தராமல் சுற்றிவிடுவதற்கு வேலைகள் நடைபெறுகின்றன. ஆவணங்கள் தராமல் இருப்பதற்கான காரணங்களை அலுவலர்கள் கூறுவார்கள். தொடர்ந்து முயன்றால் மட்டுமே பெற முடியும். தமிழ்நாட்டில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டாலும், 6 லட்சம் மனுக்கள் மட்டுமே பதிவாகி உள்ளது.

மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. அறப்போர் இயக்கம் 8 மாவட்டங்களில் தொடங்க உள்ளோம். கிராமம், கல்லூரியிலும் சிறிய அளவிலான மக்களாக இருந்தாலும் அதனைக்கொண்டு செல்ல உள்ளோம். ஊழலை ஒழிப்பதற்கு தகவல் அறியும் உரிமைச்சட்டம் என்ற கருவி நம்மிடம் இருக்கிறது. அதனைப் பயன்படுத்துவது குறித்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். ஓராண்டிற்குள் 1000 இடங்களுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வினை கொண்டுசெல்வதற்கான முயற்சிகள் நடைபெற்றுள்ளன” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாளையங் கோட்டை வாசல்களுக்கு உயிரூட்டப்பட்டது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.