தமிழ்நாடு

tamil nadu

ஆர்எஸ்எஸ் பேரணியை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு - உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு!

By

Published : Mar 17, 2023, 5:30 PM IST

Updated : Mar 17, 2023, 6:35 PM IST

Etv Bharat
Etv Bharat ()

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை அனுமதிப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை மார்ச் 27ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

டெல்லி:சென்னை, விழுப்புரம், நாகர்கோவில் உள்பட தமிழகத்தில் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டது. இந்த அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி காவல் துறையிடம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முறையிட்டது. பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளிட்டப் பல்வேறு பிரச்னைகள் காரணமாக இந்த ஊர்வலத்திற்கு காவல் துறை அனுமதி வழங்க மறுத்தது.

இதையடுத்து ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கக் கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. தமிழக காவல் துறை தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. கோவை, பல்லடம், நாகர்கோயில் உள்ளிட்ட 6 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி மறுத்தும், இதர 44 இடங்களில் சுற்றுச் சுவருக்குள் அணிவகுப்பு நடத்தி கொள்ளவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு, கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பேரணியை நடத்த அனுமதிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும் அணிவகுப்பு நடத்துவது தொடர்பாக 3 தேதிகளை குறிப்பிட்டு, போலீசாரிடம் புதிய விண்ணப்பம் வழங்க வேண்டும் என்றும், அதில் ஒரு தேதியை தேர்வு செய்து போலீசார் அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இருப்பினும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி வழங்காததால், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் ஆவடி காவல் ஆணையர் ஆகியோருக்கு நீதிமன்ற அவமதிப்பு எச்சரிக்கை நோட்டீஸ் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்தால் மாநிலத்தின் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என அரசில் தரப்பில் வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று (மார்ச்.17) உச்ச நீதிமன்றத்தில் மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோகத்ஹி, "கடந்த 15 நாட்களாக வட மாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்திகள் குறித்து ஆராயப்பட்டு வந்ததால் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலம் குறித்து தமிழக அரசால் ஆலோசிக்க முடியவில்லை என்றும், வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

மாநிலத்தில் என்ன நிகழ்ந்து வருகிறது என தொடர்ந்து கண்காணித்த வருவதாக தெரிவித்த நீதிபதி ராம சுப்பிரமணியன் அடங்கிய அமர்வு வழக்கை மார்ச் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:ரயில் பயணியிடம் 2¾ கிலோ தங்கம், ரூ.35 லட்சம் பணம் பறிமுதல் - ஹவாலா பணமா?

Last Updated :Mar 17, 2023, 6:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details