தமிழ்நாடு

tamil nadu

பஞ்சாப்பில் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் கைது?: மாநிலம் முழுவதும் இணைய சேவை முடக்கம்!

By

Published : Mar 18, 2023, 6:28 PM IST

அம்ரித்பால் சிங் கைது?

பஞ்சாப்பில் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் நாளை வரை இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அமிர்தசரஸ்:காலிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்க வேண்டும் என சீக்கியர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் இந்த முன்னெடுப்பை தீவிரமாக செயல்படுத்தி வருபவர் அம்ரித் பால் சிங். கடந்த பிப்ரவரி மாதம் அம்ரித்தின் உதவியாளர் லவ்ப்ரீத் டூஃபனை கடத்தல் வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அம்ரித்பால் ஆதரவாளர்களுடன் அஜ்னாலா காவல் நிலையத்தை முற்றுகையிட்டார். வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் திரண்ட அம்ரித்தின் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார் சிலர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், அம்ரித்தின் ஆதரவாளர் லவ்ப்ரீத் பிப்ரவரி 24ம் தேதி விடுவிக்கப்பட்டார். எனினும் அம்ரித் பாலை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அவரை கைது செய்யவும் முடிவு செய்தனர்.

அம்ரித்பால் சிங் கைது?: இந்நிலையில் ஜலந்தர் அருகே உள்ள ஷாகோட் பகுதிக்கு அம்ரித் பால் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார், அம்ரித்தை கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவரது ஆதரவாளர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், போலீசாரின் பிடியில் இருந்து அம்ரித் தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

போலீசார் குவிப்பு: இதற்கிடையே அம்ரித்தின் சொந்த ஊரான ஜலுபூர் கைராவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஷாகோட் பகுதியில் உள்ள சாலைகளில் தடுப்பு வேலிகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

இணைய சேவை முடக்கம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. நாளை (மார்ச் 19) நண்பகல் 12 மணி வரை இணையதள சேவை முடக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. எனினும் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும், வெறுப்புணர்வை தூண்டும் கருத்துக்களை புறக்கணிக்க வேண்டும் எனவும் காவல்துறைகேட்டுக் கொண்டுள்ளது.

யார் இந்த அம்ரித்பால் சிங்?: “வாரிஸ் பஞ்சாப் டீ“ என்ற அமைப்பை நடத்தி வந்த தீபு சித்து கடந்த ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அமைப்பின் தலைவராக அம்ரித்பால் பொறுப்பேற்றார். காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையை முன்னெடுத்து செல்லும் இவர், ஆபரேஷன் புளு ஸ்டாரின் (பிரிவினையை தூண்டிய சீக்கியர்களுக்கு எதிரான நடவடிக்கை) போது கொல்லப்பட்ட பிந்த்ரன்வாலேவின் 2.0 என கூறிக் கொண்டு வலம் வருகிறார். அமிர்தசரஸ் மாவட்டம் ஜல்லு புர் கைராவை சேர்ந்த இவர் துபாயில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு திரும்பினார்.

இதையும் படிங்க: இம்ரான் கான் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த போலீசார்: பிடிஐ தொண்டர்கள் மீது தடியடி... 40 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details