இம்ரான் கான் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த போலீசார்: பிடிஐ தொண்டர்கள் மீது தடியடி... 40 பேர் கைது!

author img

By

Published : Mar 18, 2023, 5:06 PM IST

இம்ரான் கான் வீட்டில் தடியடி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வீட்டுக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்த நிலையில், பிடிஐ கட்சி தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பிடிஐ கட்சியினர் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

லாகூர்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் 2018ஆம் ஆண்டு முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். அப்போது வெளிநாடுகளில் இருந்து அவருக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக தேர்தல் ஆணையம் குற்றம் சாட்டியது. பரிசுப் பொருட்கள் தொடர்பான விவரங்களை அவர் மறைத்ததாக தேர்தல் ஆணையம் புகார் அளித்தது.

இந்த வழக்கு கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பலமுறை சம்மன் அனுப்பியும் பாதுகாப்பை காரணம் காட்டி, இம்ரான் கான் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து நீதிபதி சஃபார் இக்பால், இம்ரான் கான் மீது ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து லாகூரில் உள்ள இம்ரான் கானின் வீட்டுக்கு பஞ்சாப் மாகாண போலீசார் சென்றனர்.

ஆனால் அவர்களை உள்ளே விடாமல் பிடிஐ கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பிடிவாரண்ட்டுக்கு எதிராக இம்ரான் தரப்பில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இம்ரான் கானை இன்று (மார்ச் 18) வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது.

பாதுகாப்பு வாகனம் விபத்து: இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராவதற்காக இம்ரான் கான் லாகூரில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார். அப்போது இம்ரான் கானுடன் சென்ற அவரது பாதுகாப்பு வாகனம் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் இம்ரானுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

வீட்டுக்குள் நுழைந்த போலீசார்: இதற்கிடையே, நீதிமன்றத்துக்கு இம்ரான் கான் புறப்பட்டு சென்றதும் அவரது வீட்டுக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். அப்போது அங்கிருந்த பிடிஐ கட்சியின் தொண்டர்கள் போலீசாரை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் 30 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

'சட்டத்தை மதிக்கிறேன்': இச்சம்பவத்துக்கு இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், "என் மனைவி புஷ்ரா பேகம் வீட்டில் தனியாக இருக்கும் நிலையில், போலீசார் அத்துமீறி நுழைந்துள்ளனர். எந்த சட்டத்தின் கீழ் இதை செய்தார்கள்? லண்டனுக்கு தப்பிச்சென்ற நவாஸ் ஷெரீப்பின் திட்டத்தின்படி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இதை செய்கிறார்.

அனைத்து வழக்குகளிலும் நான் ஜாமீன் பெற்றிருந்தாலும், தற்போதைய அரசு என்னை கைது செய்ய முயற்சிப்பது தெளிவாக தெரிகிறது. அவர்களின் தவறான நோக்கங்களை அறிந்திருந்தும், நான் இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்குச் செல்கிறேன், ஏனென்றால் நான் சட்டத்தை நம்புகிறேன். ஆனால் இந்த மோசடி கும்பலின் தவறான நோக்கம் அனைவருக்கும் தெரிய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கனடாவில் இருந்து 700 இந்திய மாணவர்கள் நாடு கடத்தல்? -காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.