டெல்லி : கடந்த சில நாட்களாக நாட்டில் கரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 591 ஆக பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 542 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
8 மாதங்களுக்கு பின் நாட்டில் மீண்டும் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியது. ஏறத்தாழ 65 ஆயிரத்து 286 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பரவல் விகிதம் 0.14 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, பஞ்சாப், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர், கேரளா, கர்நாடகா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பலி எண்ணிக்கை பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.