தமிழ்நாடு

tamil nadu

நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பெண் சிவிங்கிப் புலி, 4 குட்டிகளை ஈன்றது!

By

Published : Mar 29, 2023, 6:59 PM IST

Cheetah
புலி

மத்தியப்பிரதேசத்தில் குனோ தேசியப் பூங்காவில், கடந்த ஆண்டு நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பெண் சிவிங்கிப் புலி ஒன்று, நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது.

டெல்லி: இந்தியாவில் அழிந்துவிட்ட விலங்கினமான சிவிங்கிப் புலிகளை மீண்டும் கொண்டு வந்து இனப்பெருக்கம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி தென் ஆப்பிரிக்க நாடான நமீபியாவிலிருந்து எட்டு சிவிங்கிப் புலிகள் கடந்த 2022ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. ஐந்து பெண் சிவிங்கிப் புலிகள் மற்றும் மூன்று ஆண் சிவிங்கிப் புலிகள் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டன.

இந்தப் புலிகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி, தனது பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி அன்று இந்தப் புலிகளை பூங்காவில் திறந்து விட்டார். பின்னர் இந்த சிவிங்கிப் புலிகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இதனிடையே கடந்த ஜனவரி மாதம் சாஷா என்ற பெண் சிவிங்கிப் புலிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனை செய்ததில், அந்த பெண் சிவிங்கிப் புலிக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பது தெரியவந்தது. அந்தப் புலிக்கு தொடர்ந்து மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த 27ஆம் தேதி சாஷா உயிரிழந்துவிட்டது. குனோ பூங்காவில் உள்ள மற்ற சிவிங்கிப் புலிகள் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பெண் சிவிங்கிப் புலி ஒன்று, நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது. பெண் சிவிங்கிப் புலி ஈன்ற குட்டிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவின் வனவிலங்குகள் பாதுகாப்பு வரலாற்றில் இது முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த ட்வீட்டை பிரதமர் நரேந்திர மோடி ரீட்வீட் செய்துள்ளார். மேலும், இது ஒரு அற்புதமான செய்தி என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இரண்டாம் கட்டமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் தென்னாப்பிரிக்காவிலிருந்து 12 சிவிங்கிப்புலிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. விமானம் மூலம் மத்தியப்பிரதேசத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்த சிவிங்கிப் புலிகள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்டன.

இதையும் படிங்க: தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகள் இந்தியா வருகை!

ABOUT THE AUTHOR

...view details