தமிழ்நாடு

tamil nadu

பீமா கோரேகான் வழக்கில் 82 வயது சமூக ஆர்வலர் கைது!

By

Published : Oct 9, 2020, 3:44 PM IST

Updated : Oct 9, 2020, 6:33 PM IST

Stan Swamy arrested

பீமா கோரேகான் வன்முறை சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமியை (வயது 82) தேசியப் புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

பீமா கோரேகான் வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமியை தேசியப் புலனாய்வு முகமை நேற்று (அக்.08) கைது செய்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம், பாகைசாவில் உள்ள அவரது இல்லத்திற்கு இரவு எட்டு மணியளவிற்கு சென்ற என்ஐஏ, இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து என்ஐஏ அளித்துள்ள தகவலின்படி, அவர் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சிக்கு நிதி திரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், மாவோயிஸ்ட் கட்சி தொடர்பான ஆவணங்கள் அவர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஸ்டான் சுவாமியை கைது செய்ய என்ஐஏ அலுவலர்கள் எந்தவொரு ஆணையையும் காட்டவில்லை என்றும், கடுமையான முறையில் அவர்கள் ஸ்டான் சுவாமியிடம் நடந்துகொண்டதாகவும் ஜார்க்கண்ட் ஜனாதிகர் மகாசபா அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும் இந்தக் கைது குறித்து சுவாமிக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், "கடந்த இரண்டு மூன்று நாள்களாக என்ஐஏ குழு வந்தது. அவர்கள் மும்பை என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்ததாகக் குறிப்பிட்டனர். ஏற்கெனவே அவர் தனது உடல்நிலை குறித்து விளக்கி, தன்னால் மும்பை அலுவலகத்துக்கு வரமுடியாது என்று கூறியிருந்தார்" என்றனர்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி இவ்வழக்கு தொடர்பாக என்ஐஏ அலுவலர்கள், இவரிடம் தலைநகர் டெல்லியில் வைத்து மூன்று மணிநேரம் விசாரித்துள்ளனர்.

2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் மகாராஷ்டிரா காவல் துறையைச் சேர்ந்த எட்டு பேர் சுவாமியின் வீட்டிற்கு வந்து சோதனையை நடத்தியுள்ளனர். அப்போது, அவரது, கணினி, ஹார்ட் டிஸ்க் போன்றவற்றைக் கைப்பற்றியதோடு அவரது இ-மெயில், பேஸ்புக் விவரங்களையும் சோதனை செய்தனர். இதேபோன்ற சோதனையை 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் மகாராஷ்டிர காவல் துறை, சுவாமியின் வீட்டில் செய்துள்ளது.

ஜார்கண்டில் பெரிதும் அறியப்பட்ட சமூக சேவகரான ஸ்டான் சுவாமி, பழங்குடியின மக்களின் உரிமைக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பீமா கோரிகன் வழக்கின் பின்னணியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி - எச்சூரி

Last Updated :Oct 9, 2020, 6:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details