தமிழ்நாடு

tamil nadu

பிபிசியின் ஆவணப்படத்தை எதிர்த்த ஏ.கே.ஆண்டனியின் மகன்... வலுத்த எதிர்ப்பால் காங்கிரஸிலிருந்து விலகல்!

By

Published : Jan 25, 2023, 3:59 PM IST

ak

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்திற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் பிரமுகர் அனில் ஆண்டனி காங்கிரஸிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். பிபிசி ஆவணப்படத்தை கண்டித்ததால், காங்கிரஸ் கட்சியினர் பலரும் தன்னை அச்சுறுத்தியதன் காரணமாக இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

டெல்லி: பிரதமர் மோடி தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் அண்மையில் வெளியிட்ட "India: The Modi Question" என்ற ஆவணப்படம் சர்ச்சையினை ஏற்படுத்தியது. இதில் குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து ஆதாரங்களுடன் பேசப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்த ஆவணப்படத்திற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆவணப்படத்தில் நம் அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த உண்மைகளைத்தான் பிபிசி கூறியுள்ளது என வரவேற்பு தெரிவித்தனர். இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்தது. இந்த ஆவணப்பட விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதனிடையே பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சர் ஏ.கே.ஆண்டனியின் மகனும், காங்கிரஸ் பிரமுகருமான அனில் ஆண்டனி நேற்று(ஜன.24) மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதில், பாஜகவுடன் தனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியர்களைப் பற்றி நீண்ட காலமாகவே தவறான எண்ணம் கொண்டுள்ள பிரிட்டனைச் சேர்ந்த பிபிசி சேனலின் ஆவணப்படத்தை இந்தியர்கள் ஆதரிப்பது மிகவும் ஆபத்தான முன்னுதாரணம் என்று தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், பிபிசி ஆவணப்படத்திற்கு கண்டனம் தெரிவித்ததால், காங்கிரஸாரிடமிருந்து தனக்கு அச்சுறுத்தல் வந்ததாகவும், அதன் காரணமாக தான் காங்கிரஸிலிருந்து விலகுவதாகவும் அனில் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அவர், "கடந்த 24 மணி நேரத்தில் பல விஷயங்கள் நடந்துவிட்டன. ஒரே இரவில் ஏராளமான அச்சுறுத்தல் அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் வந்தன. குறிப்பாக காங்கிரஸை சேர்ந்த சிலரின் அச்சுறுத்தல் என்னை மிகவும் வேதனைப்படுத்திவிட்டது. அவர்கள் எனது ட்வீட்டை நீக்கும்படி அறிவுறுத்தினர்.

எனது மாற்றுக்கருத்தை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. காங்கிரஸில் எனக்கு கருத்து சுதந்திரமோ, உரிய இடமோ இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதனால், நான் ராஜினாமா செய்தேன். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு. எனது தந்தையிடம் ஆலோசிக்கவில்லை. எனது முடிவை காங்கிரஸ் தலைமை ஏற்கும் என நம்புகிறேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க: "கேரளாவில் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் ஜன.26-ல் திரையிடல்" - DYFI, KPCC அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details