"கேரளாவில் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் ஜன.26-ல் திரையிடல்" - DYFI, KPCC அறிவிப்பு!
Updated on: Jan 25, 2023, 11:24 AM IST

"கேரளாவில் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் ஜன.26-ல் திரையிடல்" - DYFI, KPCC அறிவிப்பு!
Updated on: Jan 25, 2023, 11:24 AM IST
மத்திய அரசு தடை விதித்த பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் குடியரசு தினத்தன்று கேரளாவில் திரையிடப்படும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் கேரள காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்: பிரதமர் மோடி தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் "India: The Modi Question" என்ற ஆவணப்படத்தை அண்மையில் வெளியிட்டது. இதில் குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு, இந்திய பிரதமர் மோடிக்கும்- இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சமூகத்திற்கும் இடையிலான பிரச்னை, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவை குறித்து ஆதாரங்களுடன் பேசப்பட்டிருந்தது.
இந்த ஆவணப்படத்தின் முதல் எபிசோட் கடந்த 17ஆம் தேதி வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது பிரதமர் மோடிக்கு எதிரான பொய் பிரசாரம் என பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அந்த ஆவணப்படம் தொடர்பான யூடியூப் வீடியோக்கள், ட்விட்டர் பதிவுகள் உள்ளிட்டவற்றையும் மத்திய அரசு முடக்கி வருகிறது.
இந்த நிலையில், கேரளாவில் குடியரசு தினத்தன்று மோடியின் ஆவணப்படம் திரையிடப்படும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) அறிவித்துள்ளது. அதேபோல் கேரள காங்கிரஸ் கமிட்டியின்(KPCC) இளைஞர் அணி, சிறுபான்மைப்பிரிவு சார்பிலும் மோடியின் பிபிசி ஆவணப்படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குடியரசு தினத்தன்று கேரளா முழுவதும் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது.
சிபிஎம் மற்றும் காங்கிரஸின் இந்த அறிவிப்புக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரளாவில் இப்படத்தை திரையிட தடை விதிக்கக்கோரி முதலமைச்சர் பினராயி விஜயனிடம் கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டர் முடக்கம் ரத்து!
