டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 73வது பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள், ரசிகர்கள் பொதுமக்கள் என அனைவரும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். குஜராத்தின் சிறிய கிராமத்தில் பிறந்து இந்தியாவின் பிரதமராக உயர்ந்து சிறந்த தலைவராக விளங்குகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளை வித்தியாசமான முறையில் கொண்டாடி வருகிறார் பிரதமர் மோடி. அந்த வகையில் இன்று (செப். 17) தனது 73வது பிறந்த நாளை முன்னிட்டு "யஷோபூமி" எனும் கன்வென்ஷன் மையத்தை டெல்லியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த மையத்தில் பெரிய ஹால், 15 கன்வென்ஷன் ரூம்கள், பார்கிங் வசதி மற்றும் பாதுகாவலர் வசதி உள்பட 11 ஆயிரம் பேர் தங்கும் வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன.
நாடு முழுவதும் பிரதமர் மோடியின் பிறந்த நாளை சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்கம் மாநிலத்தில் சிலிகுரியில் பிரதமர் மோடியை போன்று ஆடை அணிந்து கேக் வெட்டி சிறுவர்கள் கொண்டாடினர். பிரதமர் மோடியின் உருவம் பொறித்த முகமூடியை அணிந்து சிறுவர்கள் கொண்டாடினர்.
ஓடிசா கட்டாக்கைச் சேர்ந்த புகை ஓவியக் கலைஞர் ஒருவர், மோடியின் உருவப்படத்தை தத்ரூபமாக வடிவமைத்து அவருக்கு பரிசளித்து உள்ளார். இதேபோல் அவரது சொந்த மாநிலமான குஜராத், அகமதாபாத்தில் உள்ள ரிவர் க்ரூஸ் உணவகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கேக் வெட்டி பிரதமர் மோடியின் பிறந்த நாளை கொண்டாடினர்.
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு “சேவா பாவ்” என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த செயலியின் மூலம் பொது மக்கள், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டு உள்ளது.