தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அஞ்சலி முதல் சைக்கிள் பேரணி வரை: தேசிய விளையாட்டு தினத்தை இந்தியா எப்படிக் கொண்டாடுகிறது தெரியுமா?

இந்த ஆண்டு ‘கெலேகா பாரத், ஜீதேகா பாரத்’ (Khelega Bharat, Jeetega Bharat) என்ற முழகத்தின் கீழ் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசிய விளையாட்டு தினம்
தேசிய விளையாட்டு தினம் (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : August 29, 2026 at 3:17 PM IST

ஹைதராபாத்: இந்திய ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்தின் 121ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் தேசிய விளையாட்டு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

விளையாட்டுத் துறையில் உலக அரங்கில் இந்தியா புதிய உச்சத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்று நாடு முழுவதும் 'தேசிய விளையாட்டு தினம்' கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மறைந்த ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளை ஒட்டி, இந்தத் தேசிய விளையாட்டு தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

கடந்த 1926ஆம் ஆண்டு தனது சர்வதேச ஹாக்கி பயணத்தைத் தொடங்கிய தியான் சந்த், இந்திய அணி 1928 (ஆம்ஸ்டர்டாம்), 1932 (லாஸ் ஏஞ்சல்ஸ்) மற்றும் 1936 (பெர்லின்) ஆகிய மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்ல முக்கியக் காரணமாக விளங்கினார். குறிப்பாக, 1928 ஒலிம்பிக்கில் 14 கோல்களுடன் தொடரில் அதிக கோல் அடித்த வீரராகத் திகழ்ந்தார். தொடர்ந்து, 1936 பெர்லின் ஒலிம்பிக்கில் இவரது தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் ஜெர்மனியை 8-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தது.

அவரது அபார விளையாட்டுத் திறமையைப் பாராட்டி, கடந்த 1956ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. மேலும், இந்தியாவின் மிக உயரிய விளையாட்டு விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் 'மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது' என இவரது பெயரில் மறுபெயரிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடப்பு 2026ஆம் ஆண்டிற்கான கொண்டாட்டங்கள், வழக்கம் போல் ஒரே நாளில் முடிந்துவிடாமல், ஆகஸ்ட் 28 முதல் ஆகஸ்ட் 30 வரை மூன்று நாட்கள் நடைபெறும் பிரம்மாண்டமான நாடு தழுவிய கொண்டாட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ‘கெலேகா பாரத், ஜீதேகா பாரத்’ (Khelega Bharat, Jeetega Bharat) என்ற முழகத்தின் கீழ் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இக்கொண்டாட்டத்தின் முதல் நாளான நேற்று (ஆகஸ்ட் 28), மேஜர் தியான் சந்திற்கு நாடு முழுவதும் உணர்வுப்பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இரண்டாம் நாளான இன்று (ஆகஸ்ட் 29), நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு விளையாட்டைக் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது விளையாட வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிக்கவும்

பிரச்சாரத்தின் இறுதி நாளான நாளை (ஆகஸ்ட் 30), ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நோக்கில் பிரம்மாண்ட சைக்கிள் பேரணிகள், நடைப்பயணங்கள் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற உள்ளன. ஹாக்கி ஜாம்பவான் தியான் சந்தின் நினைவைப் போற்றும் வகையில் அமையப் பெற்றுள்ள இந்த மூன்று நாள் விளையாட்டுத் திருவிழா, தற்போதைய இளைய தலைமுறையினரிடையே பெரும் எழுச்சியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.