ETV Bharat / sports

இழந்த பெருமையை மீட்டதா டெஸ்ட் கிரிக்கெட்? | இந்தியா vs இலங்கை டிரா முதல் வரலாற்றின் டாப்-5 அதிவேக போட்டிகள் வரை!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த பந்துகளில் முடிவடைந்த டாப்-5 டெஸ்ட் போட்டிகளின் தொகுப்பை இந்தப் பதிவில் பார்ப்போம்.

டாப்-5 அதிவேக டெஸ்ட் போட்டிகள்
டாப்-5 அதிவேக டெஸ்ட் போட்டிகள் (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : August 29, 2026 at 9:01 AM IST

6 Min Read
Choose ETV Bharat

-BY பாரதிகண்ணன் மணி

ஐந்து நாட்கள், 15-க்கும் மேற்பட்ட செஷன்ஸ், வியூகம், பொறுமை மற்றும் நிதானம் என இவை அனைத்தும் சேர்ந்தது தான் டெஸ்ட் கிரிக்கெட். அதிலும் குறிப்பாக, இன்று வரை கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வடிவம் (ஃபார்மேட்ஸ்) என்ற நற்பெயரும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு உண்டு. கிரிக்கெட் விளையாடத் தொடங்கும் ஒவ்வொரு வீரரின் முதல் லட்சியமும், தன் நாட்டிற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது தான்.

மாறி வரும் பார்வையும், அதிரடி அணுகுமுறையும்

ஏனெனில், ஒரு வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதித்துவிட்டால் மற்ற வடிவங்களிலும் அவரால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதைப் பலரும் நமக்கு நிரூபித்துக் காட்டியுள்ளனர். ஆனால், சமீபகாலமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதான பார்வை மாறத் தொடங்கியுள்ளதை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். ஏனெனில், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இப்போதைய ரசிகர்கள் எதிர்பார்ப்பது அதிரடியான ஆட்டத்தை தான்.

அதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் குறையத் தொடங்கியது என்பதே நிதர்சனம். மேலும், ஒரு சில கிரிக்கெட் வாரியங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்க்கிறோம் என்ற பெயரில் அதிரடியான அணுகுமுறையைப் பின்பற்றியதோடு, அதனைச் செயல்படுத்தியும் காட்டின. அதன் விளைவாக, அந்த அணிகளின் டெஸ்ட் கிரிக்கெட் வளர்ச்சி முற்றிலுமாக அதளபாதாளத்திற்குச் சென்றதுதான் மிச்சம்.

டாப்-5 அதிவேக டெஸ்ட் போட்டிகள்
இந்திய அணி (IANS)

WTC-இன் தாக்கம்

ஏனெனில், 5 நாள்கள் விளையாடப்படக் கூடிய டெஸ்ட் போட்டிகளை, அதிரடி ஆட்டம் என்ற பெயரில் ஓரிரு நாள்களில் முடித்து, அந்த விளையாட்டின் மீதான ஈர்ப்பைக் கெடுத்து வருகின்றனர். அதிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) அறிமுகத்திற்குப் பின், புள்ளிகளுக்காக அணிகள் அதீத ஆக்ரோஷத்தைக் காட்டுவதும், சுழற்பந்து அல்லது வேகப்பந்துவீச்சுக்கு அளவுக்கு அதிகமாகச் சாதகமான ஆடுகளங்களைத் தயாரிப்பதும் இந்த நிலைக்கு முக்கியக் காரணங்களாகும்.

அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக, சமீபத்தில் மெக்காயில் (Mackay) நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியைக் கூறலாம். பந்து வீச்சாளர்கள் அதிக ஆதிக்கம் செலுத்திய அந்த டெஸ்ட் போட்டி, வெறும் 125 ஓவர்களில் (அதாவது 2 நாள்களிலேயே) முடிவை எட்டி ரசிகர்களைப் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுடன், மிக வேகமாக முடிவை எட்டிய டெஸ்ட் போட்டிகளின் பட்டியலிலும் இணைந்தது.

ஏனெனில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சில போட்டிகள் சில நூறு பந்துகளிலேயே முடிவடைந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. ஆடுகளத்தின் மோசமான தன்மை, பேட்ஸ்மேன்களின் சுமாரான ஆட்டம் மற்றும் பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சு ஆகியவை இணைந்துதான் இந்த விசித்திரமான சாதனைகளை உருவாக்கியுள்ளன. அதன்படி, கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளில் முடிவடைந்த டாப்-5 டெஸ்ட் போட்டிகளின் தொகுப்பை இந்தப் பதிவில் பார்ப்போம்.

டாப்-5 அதிவேக டெஸ்ட் போட்டிகள்
இந்தியா vs ஆஸ்திரேலியா (IANS)

இந்தியா vs தென்னாப்பிரிக்கா (கேப் டவுன், 2024) – 642 பந்துகள்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகக் குறைந்த பந்துகளில் முடிவு எட்டப்பட்ட வரலாற்றுப் போட்டியாக, கடந்த 2024 ஆம் ஆண்டு கேப் டவுனில் நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த போட்டி வெறும் 642 பந்துகளில் (107 ஓவர்கள்) முடிவை எட்டியது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி வெறும் 55 ரன்களுக்குச் சுருண்டது.

அதன் பின், தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியும் எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சரிந்தது. அந்த இன்னிங்ஸில் இந்திய அணி 153 ரன்கள் எடுத்திருந்த போது, கடைசி 6 விக்கெட்டுகளை ஒரு ரன் கூட எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 176 ரன்கள் மட்டுமே எடுக்க, இறுதியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் வெறும் ஒன்றரை நாட்களுக்குள் முடிந்து உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா (மெல்போர்ன், 1932) – 656 பந்துகள்

பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடிப்பது, கடந்த 1932 ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி தான். சுமார் 92 ஆண்டுகளுக்கும் மேலாக முறியடிக்கப்படாமல் இருந்த இந்த உலக சாதனை, சமீபத்தில் தான் (2024 கேப் டவுன் போட்டியில்) முறியடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், இப்போட்டி வெறும் 656 பந்துகளில் முடிவை எட்டியிருந்தது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 45 ரன்களுக்கும் சுருண்டது. அதேசமயம் மறுபக்கம் ஆஸ்திரேலிய அணி தனது ஒரே இன்னிங்ஸில் 153 ரன்கள் எடுத்திருந்தது. இதன் காரணமாக, ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்தது.

வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து (பிரிட்ஜ்டவுன், 1935) – 672 பந்துகள்

இப்பட்டியலில் அடுத்த இடத்தைப் பிடிக்கும் போட்டியும் வரலாற்றுப் பழமை வாய்ந்த ஒன்று தான். கடந்த 1935ஆம் ஆண்டு பார்படாஸின் பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிதான் அது. இப்போட்டியின் மீதும், இரு அணிகளின் கேப்டன்கள் எடுத்த முடிவுகள் மீதும் இன்றளவும் பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. ஏனெனில், ஆடுகளம் பந்துவீச்சுக்கு மிக சாதகமாக இருந்ததால், இரு அணிகளின் கேப்டன்களும் சில விசித்திரமான முடிவுகளை எடுத்தனர்.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்திருந்தபோதே டிக்ளர் செய்வதாக அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனெனில், டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் வலுவான முன்னிலையில் இருக்கும் அணிகளே டிக்ளர் செய்வது வழக்கம். ஆனால், இப்போட்டியில் 21 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையிலும், கைவசம் 3 விக்கெட்டுகள் இருந்தபோதே இங்கிலாந்து டிக்ளர் செய்தது.

டாப்-5 அதிவேக டெஸ்ட் போட்டிகள்
சோனல் தினுஷா (IANS)

இந்த போட்டியின் விசித்திரம் அத்துடன் நிற்கவில்லை, அடுத்ததாக 21 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும், 6 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்களை மட்டுமே எடுத்திருந்தபோது டிக்ளர் செய்து ரசிகர்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால், இங்கிலாந்து அணிக்கு 75 ரன்கள் மட்டுமே வெற்றிக்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமான அந்த ஆடுகளத்தில் விடாமுயற்சியுடன் போராடிய இங்கிலாந்து அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்களைச் சேர்த்து த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இதில் கூடுதல் ஆச்சரியம் என்னவெனில், இந்த முழுப் போட்டியிலும் வெறும் 672 பந்துகள் மட்டுமே வீசப்பட்டதுதான். ஆனாலும், போட்டியை டிரா செய்வதற்கான வாய்ப்புகள் இருந்தபோதிலும், இரு அணி கேப்டன்களும் ஏன் டிக்ளர் என்ற முடிவை எடுத்தனர் என்பது இன்றளவும் விடைதெரியாத கேள்விக்குறியாகவே உள்ளது.

ஆஸ்திரேலியா vs வங்கதேசம் (மெக்காய் , 2026) – 750 பந்துகள்

பட்டியலில் நான்காம் இடத்தைப் பிடித்த போட்டியாக, சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இடம்பெற்றுள்ளது. மெக்காயில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இரு அணிகளைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களும் ஆதிக்கத்தைச் செலுத்தினர். இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெறும் 64 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

பின்னர், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியும் 210 ரன்களை மட்டுமே எடுத்து ஆல்-அவுட்டானது. இருப்பினும், அந்த அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்கள் வலுவான முன்னிலை பெற்றது. அதன் பின், 156 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச பேட்டர்கள், மீண்டும் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 95 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் முழுமையாக வெறும் 750 பந்துகள் (அதாவது 125 ஓவர்கள்) மட்டுமே வீசப்பட்டிருந்தன. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், இரண்டே நாட்களில் இப்போட்டி முடிவை எட்டி ரசிகர்களைப் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா (மான்செஸ்டர், 1888) – 788 பந்துகள்

பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடிக்கும் போட்டியும் வரலாற்றுப் பழமை வாய்ந்த ஒன்று தான். கடந்த 1888ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே மான்செஸ்டரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி அது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 172 ரன்கள் எடுத்தது. ஆனால், ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 81 ரன்களுக்குச் சுருண்டு ஃபாலோ ஆன் பெற்றது.

அதன்பின், தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்களாலும் இங்கிலாந்தின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியவில்லை. அடுத்தடுத்துச் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, மீண்டும் 70 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன் காரணமாக, வெறும் 788 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட இப்போட்டியில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

டி20 மற்றும் டி10 போன்ற அதிரடிப் போட்டிகள் ரசிகர்களைக் கவர்ந்து வரும் இந்தக் காலத்தில், ஐந்து நாட்கள் நடக்க வேண்டிய பாரம்பரிய டெஸ்ட் போட்டிகளை முழுமையாகப் பார்ப்பதே மிக அரிதான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், சமீபத்தில் நிறைவடைந்த இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஐந்தாம் நாள் வரையிலும் முடிவு எட்டப்படாமல் 'டிராவில்' முடிவடைந்தது.

இதையும் படிக்கவும்

மின்னல் வேகத்தில் முடியும் போட்டிகள் தரும் த்ரில்லை விட, ஐந்து நாட்களின் முடிவில் எட்டப்படும் டிரா மற்றும் த்ரில் வெற்றிகள்தான் டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்பதை இந்த இந்தியா - இலங்கை போட்டி உணர்த்தியுள்ளது. மேலும், இப்போட்டி டெஸ்ட் கிரிக்கெட்டின் உண்மையான சுவாரசியத்தையும், இறுதிவரை போராடும் வீரர்களின் பொறுமையையும் ரசிகர்களுக்கு மீண்டும் நினைவூட்டும் விதமாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.