டிஎன்பிஎல் 2026: மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் மகுடம் சூடியது கோவை கிங்ஸ்!
இதன்மூலம், டி.என்.பி.எல் வரலாற்றில் 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள கோவை கிங்ஸ், இத்தொடரில் அதிக கோப்பைகளை வென்ற இரண்டாவது அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.


Published : August 29, 2026 at 11:17 AM IST
ஹைதராபாத்: டி.என்.பி.எல் 2026 தொடரின் இறுதிப் போட்டியில், மதுரை பாந்தர்ஸ் அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய விதா கோவை கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 10ஆவது சீசன் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்) டி20 தொடரின் இறுதிப் போட்டி, நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் கோவை கிங்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான சுரேஷ் லோகேஷ்வர் 11 ரன்களுக்கும், ராதாகிருஷ்ணன் 13 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த பாலசுப்ரமணியம் சச்சின் மற்றும் ஆண்ட்ரே சித்தார்த் இணை, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பைத் தடுத்தனர்.
The celebrations. The emotions. The moment they became champions! 🏆#TNPL10 #TNPL2026 #NammaOoruNammaGethu #Season10SemmaGethu #DecadeOfKondattam pic.twitter.com/yB0wVZ8OJA
— TNPL (@TNPremierLeague) August 28, 2026
இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரே சித்தார்த், அரைசதம் கடந்து அசத்தினார். மறுபக்கம் நிதானமாக விளையாடி வந்த பாலசுப்ரமணியம் சச்சின் 39 ரன்களில் விக்கெட்டை இழக்க, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆண்ட்ரே சித்தார்த் 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உட்பட 82 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் பெரிதாக ரன்களைச் சேர்க்கத் தவறினர்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் கோவை கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது. மதுரை பாந்தர்ஸ் அணி சார்பில் பி. சரவணன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அணியின் தொடக்க வீரர்களான ஆர். ராம் குமார் மற்றும் பாரத் சங்கர் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.
Let the celebrations begin! 🏆#TNPL10 #TNPL2026 #NammaOoruNammaGethu #Season10SemmaGethu #DecadeOfKondattam pic.twitter.com/ZwaU0U73Wu
— TNPL (@TNPremierLeague) August 28, 2026
அதன்பின் ஜோடி சேர்ந்த என்.எஸ். சதுர்வேத் மற்றும் ஹரி ராகவேந்திரா ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். இதில் ஹரி ராகவேந்திரா 24 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களம் இறங்கிய கேப்டன் பாலச்சந்தர் அனிருத் 24 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். மறுபுறம் அரைசதத்தை நெருங்கிய என்.எஸ். சதுர்வேத் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உட்பட 40 ரன்களைச் சேர்த்த கையோடு ஆட்டமிழந்தார்.
அதன்பின் களம் இறங்கிய வீரர்களால் எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக மதுரை பாந்தர்ஸை அணி 14.2 ஓவர்களில் வெறும் 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்-அவுட் ஆனது. கோவை கிங்ஸ் அணி சார்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மணிமாறன் சித்தார்த் மற்றும் கேப்டன் ஷாருக்கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
The list grows, the legacy continues. 🏆#TNPL10 #TNPL2026 #NammaOoruNammaGethu #Season10SemmaGethu #DecadeOfKondattam pic.twitter.com/KtkkO6mci7
— TNPL (@TNPremierLeague) August 28, 2026
இதையும் படிக்கவும் |
இதன் மூலம் கோவை கிங்ஸ் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. அத்துடன் 3ஆவது முறையாக டிஎன்பிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவை அணியின் ஆண்ட்ரே சித்தார்த் ஆட்டநாயகன் விருதையும், தொடர் முழுவதும் சிறப்பாகச் செயல்பட்ட கோவை அணியின் பாலசுப்ரமணியம் சச்சின் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

