தமிழ்நாடு

tamil nadu

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! - Srirangam Ranganatha Temple

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 28, 2024, 11:48 AM IST

Srirangam ranganathaswamy temple

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்தாண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு வெள்ளி பல்லக்கில் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு  கொடிமர மண்டபம் வந்தடைந்தார். அங்கு, தங்க கொடி மரத்தில் உள்ள கொடி படத்திற்கு பட்டர் சுவாமிகள் மற்றும் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்து, காலை 6.15 மணிக்கு மேஷ லக்னத்தில் மேளதாளம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

சித்திரை தேர்த்திருவிழா முக்கிய நிகழ்வுகளாக மே 1 ஆம் தேதி, கருடசேவை வைபவமும், 4 ஆம் தேதி நம்பெருமாள் நெல் அளவை கண்டருளும் வைபவமும், 5ஆம் தேதி நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளும் வைபவமும், 6 ஆம் தேதி காலை 6 மணியளவில் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில், தேரோட்டத்தை முன்னிட்டு மே 6 ஆம் தேதி மாவட்ட நிர்வாகம், உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details