தமிழ்நாடு

tamil nadu

தமிழிசை செளந்தரராஜன் ஜூம் மீட்டிங்கில் ஆபாச படங்களைப் பரவ விட்டதா திமுக? - நடந்தது என்ன? - Tamilisai Soundararajan accused DMK

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 14, 2024, 9:25 PM IST

Tamilisai Soundararajan Zoom Meeting Issue: தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜூம் மீட்டிங்கில் திமுக ஆபாசப் படங்களைப் பரவ விட்டதாகத் தமிழிசை செளந்தரராஜன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.

Tamilisai Soundararajan Zoom Meeting Issue
Tamilisai Soundararajan Zoom Meeting Issue

சென்னை:நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், முன்னாள் தெலங்கானா ஆளுநருமான, தமிழிசை செளந்தரராஜன் தனது சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, "அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் வாக்காளர்களை என்னால் நேரில் வந்து சந்திக்க இயலாத நிலை ஏற்பட்டதால், ஜூம் மீட்டிங்க் ஒன்றை ஏற்பாடு செய்தேன். அந்த மீட்டிங்கில் 100க்கும் மேற்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு மக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மகிழ்ச்சியோடு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மீட்டிங்க்கில் பேச ஆரம்பித்த சில மணித்துளிகளில் பெண்கள் பார்க்க முடியாத அளவிற்கு ஆபாசப் படங்களை இடையில் விட்டு வேட்பாளருக்கும், வாக்காளருக்கும் இடையேயான இணைப்பைத் துண்டித்து, இவர்கள் எந்த விதத்திலும் இணைந்து விடக்கூடாது, இவர்களுக்கு எந்த விதத்திலும் ஆதரவு கொடுத்துவிடக்கூடாது என்றும், இங்கே நடக்கும் தப்புகள் எல்லாம் வேட்பாளருக்குத் தெரிந்து விடக்கூடாது என்றும், அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை சொல்வதைத் தடுக்கும் விதமாகவும், நான் அவர்களிடம் வாக்குகளைக் கேட்டு விடக்கூடாது என்ற கீழ்த்தனமான எண்ணத்தோடு எல்லோரும் இணைந்து இணையத்தில் பார்த்துக்கொண்டிருக்கும் போது, பார்க்க முடியாத அசிங்கமான படங்களைப் பரவ விட்ட திமுகவை நான் நேரடியாகக் குற்றம் சாட்டுகிறேன்.

இப்படிப்பட்ட மோசமான, கேவலமான அரசியலைச் செய்ய வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன். எவ்வளவு தான் நீங்கள் கேவலமான அரசியலைச் செய்தாலும் மக்களுக்கான எங்களது தொடர்பைத் துண்டிக்க இயலாது. நேரடி அரசியலைச் செய்யுங்கள்.

நாமெல்லாம் அரசியலைத் தூய்மைப்படுத்துவதற்காக வந்திருக்கிறோம். ஆனால் இப்படி மோசமான அரசியலை முன்னெடுத்துச் செல்பவர்க்குத் தக்க பதிலடியாக இந்த தேர்தல் கொடுக்கப்படும். பெண்கள் சுதந்திரமாக இணையத்தில் பேச முடியாத சூழல் தமிழகத்தில் இருக்கின்றது என்றால், யாரால் பொறுத்துக்கொள்ள முடியும்.

இதைப்பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் எல்லாம் எவ்வளவு கோபமாக இருக்கிறார். எனக்கு மிகுந்த மன வருத்தமாக உள்ளது. அதனால் நான் நேர்மையான அரசியலை முன்னெடுத்துச் செல்வேன். அதற்கு யார் இடையூறு செய்தாலும் பொறுக்க மாட்டேன். பொங்கி எழுவேன்.

முதலில், நான் அடுக்குமாடிக் குடியிருப்பைச் சார்ந்த சகோதர, சகோதரிகளுக்கு எனது மன்னிப்பைக் கோருகிறேன். ஏனென்றால் நாமெல்லாம் அன்போடு, பாசத்தோடு பழக வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்ட ஜூம் மீட்டிங்க்கை அதிர்ச்சிக்குள்ளாக்கி, அசிங்கத்திற்குள்ளாகி, இந்த எதிர்க்கட்சிகள் செய்வதை நாமெல்லாம் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

தூய்மையான அரசியலை முன்னெடுப்போம். படித்தவர்கள் அரசியலுக்கு வருவோம், அதே நேரத்தில் வாக்குச் சாவடிக்குச் சென்று அதிக வாக்குகளைக் கொடுத்து இவர்களுக்குத் தக்க பாடத்தைப் புகட்டுவோம். எப்பொழுதுமே மகிழ்ச்சியோடு பேசும் உங்களிடம் நான் இன்றைக்கு வருத்தத்தோடு பேசுகிறேன். ஆனால் இந்த தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து மறுபடியும், மகிழ்ச்சியோடு, துணிச்சலோடு உங்களுடன் பேச வருவேன்" என அந்த வீடியோவில் கூறி உள்ளார்.

இதையும் படிங்க:'இந்தியாவைப் பிடித்துள்ள மோடி என்ற கிரகணம் விலகி நாடு வெளிச்சம் பெறும்' - பாஜகவை சாடிய சிஐடியூ சௌந்தர்ராஜன் - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details