தமிழ்நாடு

tamil nadu

புதுச்சேரியில் நாளை பந்த்..! சிறுமி கொலை விவகாரத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலக வேண்டும் - இரா.சிவா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 7:03 AM IST

Updated : Mar 7, 2024, 8:04 AM IST

Puducherry girl murder: புதுச்சேரி சிறுமியின் மரணத்திற்கு தார்மீக பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா, நாளை இந்தியா கூட்டணி சார்பில் பந்த் அனுசரிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

Puducherry Opposition Leader R Siva said Home Minister Namassivayam should resign for girl murder issue
புதுச்சேரி சிறுமி கொலை

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 2ஆம் தேதி மாயமான 9 வயது சிறுமி, நேற்று முன்தினம் அவரது வீட்டின் அருகில் உள்ள வாய்க்காலிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இது தொடர்பாக 2 பேரைக் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து புதுச்சேரி மாநில எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா விடுத்துள்ள அறிக்கையில், “புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயதான சிறுமி அதே பகுதியில் கடந்த 2ஆம் தேதி மதியம் 1 மணியளவில் காணாமல் போனார். இது தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து 5 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் சிறுமி தனது வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

சிறுமியை மூட்டையாகக் கட்டி வாய்க்காலில் வீசியது யார்? மூன்று நாட்களாக ஊரையே சல்லடை போட்டுத் தேடிய நிலையில், சிறுமியின் சடலம் அருகே இருந்த வாய்க்காலுக்கு வந்தது எப்படி? அந்த வாய்க்காலைப் பல நூறு தடவை பார்த்தவர்கள் திடீரென இரவோடு இரவாக சிறுமியின் சடலம் வந்தது எப்படி எனக் கேள்வி எழுப்புகிறார்கள். 5 தனிப்படை போலீசாரின் தேடுதல் வேட்டை நீர்த்து போனது எப்படி? தேடுதல் வளையத்தை கிடுக்கி பிடிக்காமல் காவல்துறை அலட்சியமாக இருந்தது ஏன்? பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக வந்த மக்களின் போராட்டத்தை ஒடுக்கத் துணை ராணுவத்தை நிறுத்தியது ஏன்?

அருகில் இருந்த கேமராக்களை ஆராய்ந்து பார்த்ததில் சிறுமி அந்தப் பகுதியை விட்டு வெளியேறவில்லை என்று காவல்துறை முடிவு செய்தும், வீடு வீடாகத் தேடியும் ஏன் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை? வீட்டில் சிறுமியைக் கொன்று, சடலத்தைப் பதுக்கி வைத்து மூட்டை கட்டிப் போட்டார்களா? இதில் போலீசார் யாரையாவது காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்களா?

காவல்துறையின் அலட்சிய தேடுதலே சிறுமியின் மரணத்திற்குக் காரணம். வீதியெங்கும் போடப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களால் எந்தப் பலனும் இல்லையா? சிறுமி சடலமாகக் கிடந்த வாய்க்காலுக்கு அருகே கஞ்சா புழக்கம் அதிகமாக இருந்திருக்கிறது. இது எல்லாம் தெரிந்தும் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி கோல்டன் ஹவர் என்று சொல்லக்கூடிய 24 மணி நேரத்திற்குள் சிறுமியை மீட்காதது புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே குறிக்கிறது.

கடந்த வாரத்தில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த குழந்தையைக் காரைக்காலில் நல்லபடியாகக் கண்டுபிடித்ததை போலவே இக்குழந்தையையும் மீட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை பொய்த்துப் போனது ஏன்? புதுச்சேரியின் குழந்தைகள் நல ஆணையத்தின் தில்லுமுல்லுகளும் கட்டப்பஞ்சாயத்துகளும் வெளிச்சத்துக்கு வந்ததால் விசாரணை அறிக்கையின் மூலம் அம்பலப்பட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளார்கள்.

சிவசாமி தலைமையிலான இந்த குழு மீது 600 பக்கம் விசாரணை அறிக்கை சமர்ப்பித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? ராஜினாமா செய்து ஓடியவர்கள் மீது இன்று வரை நடவடிக்கை இல்லாதது ஏன்? குழந்தைகள் நல ஆணையத்திற்கு புதிய நிர்வாகிகளை உடனே நியமனம் செய்ய வேண்டும். முடங்கிக் கிடக்கும் மகளிர் ஆணையத்திலும் செயல்படும் நிர்வாகிகளை உடனே நியமிக்க வேண்டும். புதுச்சேரியில் தலைவிரித்தாடும் கஞ்சா, போதை ஸ்டாம்ப், மது போன்றவற்றால் உள்ளூர் மக்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பற்ற சூழலை உணர்கிறார்கள்.

சிறுமி இறந்தது குறித்து புதுச்சேரி அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வும், கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்தவும் வேண்டும். பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிறுமியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு உரிய நீதியைக் காலம் தாழ்த்தாமல் உடனே வழங்க வேண்டும்.

குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி உச்சபட்சத் தண்டனையை வழங்க வேண்டும். குழந்தையைப் பறிகொடுத்து வாடும் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்குவது என்பது கண்துடைப்பாக இருக்கக் கூடாது. அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். உரிமை கேட்டுப் போராடியவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன். உண்மையான குற்றவாளிகள் யார் என்று பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இந்த குற்றவாளிகளுக்காக நீதிமன்றத்தில் கழக வழக்கறிஞர்கள் யாரும் வழக்காடக் கூடாது என அறிவுறுத்தியுள்ளேன். உள்துறையைக் கையில் வைத்துக் கொண்டு மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் அரசியல் செய்யும் புதுச்சேரி பாஜகவையும், என்ஆர்.காங்கிரஸையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். போலி செய்திகளையும் அவதூறுகளையும் பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

தான் ஒரு துணை நிலை ஆளுநர் என்பதை மறந்து, தமிழிசை சௌந்தரராஜன் முழு பாஜக காரியகர்த்தா போல செயல்படுவதைத் தவிர்த்து பொறுப்புடன் செயல்பட வேண்டும். இன்று மாலை 4 மணிக்கு இந்தியா கூட்டணி சார்பாக அண்ணா சிலையிலிருந்து புறப்பட்டு, காமராசர் சாலை, நேரு வீதி வழியாகச் சென்று தர்ணா போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறேன்.

கஞ்சா போதைப்பொருளை ஒழிக்கக் கோரியும், இறந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டியும், இச்சம்பவத்திற்குத் தார்மீக பொறுப்பேற்று புதுச்சேரியின் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலக வேண்டியும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்தியா கூட்டணி சார்பில் முழு பந்த் அனுசரிக்கப்படுகிறது. இதனால், தேர்வெழுதும் +2 மாணவர்கள் பாதிக்காத வகையில், பள்ளி கல்லூரி பேருந்துகள், மருத்துவமனை, பால், மருந்தகம் போன்றவற்றுக்கு விலக்கு அளித்து, பொதுமக்கள் பாதிக்காத வகையில் அனைவரின் பேராதரவோடும் உணர்வோடும் இப்போராட்டம் நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புதுச்சேரி சிறுமி கொலை; ஒரு வாரத்தில் தண்டனை கிடைக்க நடவடிக்கை - தமிழிசை சௌந்தரராஜன்

Last Updated :Mar 7, 2024, 8:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details