தமிழ்நாடு

tamil nadu

பெண் பாஜக பிரமுகரை கொலை செய்த விவகாரம்: ஜாமீனில் வந்தவர் கொடூரமாக கொலை..குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 7:29 AM IST

Salem Crime News: சேலத்தில் பெண் பாஜக பிரமுகரை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவரை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Police inquiry on Man brutal murder in Salem
Salem Murder case

சேலம்: பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி(45). இவர் கோரிமேடு ஏ.டி.சி. நகர் சாலையில் தனது சகோதரர் கண்ணன் நடத்தி வரும் முடித்திருத்தும் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கருணாநிதியின் மகள் ராஜேஸ்வரியும், அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன்லால் என்பவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் ராஜேஸ்வரி தனது கணவன் மோகன்லாலுடன் அன்னதானப்பட்டியில் உள்ள கண்ணனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். தனது மகள் ராஜேஸ்வரி சகோதரர் வீட்டிற்கு வந்திருப்பதை அறிந்த கருணாநிதி கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி கண்ணனின் வீட்டிற்கு சென்றார். மேலும், தனது மகள் காதல் திருமணம் செய்ததற்கு தனது அண்ணி சாந்தி தான் காரணம் எனக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து ஆத்திரத்தில் சாந்தியை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதில் உயிரிழந்த சாந்தி, பாரதிய ஜனதா கட்சியின் சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்தவர். கொலை வழக்கில் கருணாநிதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் ஜன.28ஆம் தேதி கோரிமேடு தொழிலாளர் நலவாரிய அலுவலகம் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அலுவலகம் முன்பு உள்ள காலியான குடியிருப்பு பகுதியில் கருணாநிதி மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் கருணாநிதியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இது குறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்தில் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கன்னங்குறிச்சி போலீசார் குற்றவாளிகளை வலைவீசித் தேடிவருகின்றனர். மேலும், மகள் திருமணத்திற்கு உதவியதாக தனது அண்ணி சாந்தியை கழுத்து அறுத்து கொலை செய்த கருணாநிதி பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இதில் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details