தமிழ்நாடு

tamil nadu

குட்கா முறைகேடு வழக்கு; “முன்னாள் அமைச்சர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கிடைத்துவிட்டது” - சிபிஐ தகவல்! - GUTKA SCAM CASE

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 3:18 PM IST

GUTKA SCAM CASE: குட்கா முறைகேடு தொடர்பான முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீதான விசாரணைக்கு அனுமதி கிடைத்து விட்டதாகவும், அது தொடர்பான கோப்புகள் தங்களிடம் பரிசீலனையில் உள்ளதாக சிபிஐ தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GUTKA SCAM CASE
GUTKA SCAM CASE

சென்னை:தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் டெல்லி சிபிஐ காவல்துறை வழக்கை விசாரித்து வருகிறது. இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் டிஜிபி, சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகரிகளுக்கு எதிராக, 2022ஆம் ஆண்டு நவம்பரில் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால், பிழையை சரி செய்து விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் ஆவணங்களுடன் தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கில் விசாரணை நடத்த, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்கு, சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராகி இருந்தார்.

அவரிடம், விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்றும், விசாரணைக்கு அனுமதி கிடைக்காத இருவருக்கு எதிராக ஒப்புதல் கிடைத்து விட்டதா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த விசாரணை அதிகாரி, ஒப்புதல் கடிதம் சிபிஐயிடம் பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தார். பின்னர் நீதிபதி, பரிசீலனை முடிந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய எவ்வளவு காலம் ஆகும் என கேட்டார். இதற்கு விரைவாக தாக்கல் செய்வதாக விசாரணை அதிகாரி தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:ஜெயலலிதாவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டவருக்கு அதிமுகவில் எம்பி சீட்.. யார் இந்த சிம்லா முத்துச்சோழன்? - Who Is Simla MuthuCholan

ABOUT THE AUTHOR

...view details