சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
‘மோடியின் உத்தரவாதம்’ என்று தலைப்பில் வெளியாகியுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. அதில், குறிப்பாக சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்' முறை அமல்படுத்தப்படும் என்று பாஜக ஆணித்தனமாக கூறியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தும் ஒரு நாடு, ஒரே தேர்தல் முறையை பாஜக அரசு முன்னெடுத்தது. இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில், கடந்த செப்டப்பர் 2 ஆம் தேதி மத்திய அரசு உயர்மட்ட குழுவை அமைத்தது.
அந்த குழு, இத்திட்டம் குறித்து 18 ஆயிரத்து 626 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் கடந்த மார்ச் 14 ஆம் தேதி சமர்ப்பித்தது. அதில், ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்தும் வகையில் அரசமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்ய மாநில அரசின் அனுமதி தேவையில்லை.
மேலும், இந்த தேர்தல் திட்டத்திற்கு 50 சதவீத மாநிலங்களின் சட்ட ஒப்புதல் அவசியம். ஒரே நாடு, ஒரே தேர்தல் அடையாள அட்டையை தயாரிக்க 50 சதவீத மாநிலங்களின் ஒப்புதல் அவசியம். மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்கள் முடிந்த 100 நாட்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
மேலும், ஒரு நாடு ஒரே தேர்தல் முறை தொடர்பாக 21 ஆயிரத்து 558 பேரிடம் கருத்துகள் பெறப்பட்டதாகவும், அதில் 80 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளதாகவும் அக்குழு தெரிவித்தது. பாஜக இந்த தேர்தல் முறை குறித்து முன்னெடுத்த நாளிலிருந்து இதற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.
இதையும் படிங்க:ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தனித் தீர்மானம் - சட்டப்பேரவையில் நிறைவேற்றம்..!
இதனிடையே, தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியில் உள்ள திமுக, விசிக, மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் இத்திட்டத்திற்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்து வந்தன. மேலும், ஒரே நாடு, ஒரே தேர்தல் சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு முற்றிலும் எதிரானது என்று எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசின் உயர்நிலை குழுவுக்கு, திமுக அரசு கடிதம் எழுதியது. அதனைத்தொடர்ந்து, ‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராகவும் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பதற்கு எதிராகவும் இரண்டு தீர்மானங்களை தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாடாளுமன்ற ஜனநாயக சிந்தனையை, அரசியல் சாசன அடிப்படையையும் சிதைத்துவிடும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. அதேபோல், இந்த புதிய முறை ‘மாநில கட்சிகளை பலவீனப்படுத்தும்' என்று ஒரே நாடு, ஒரே தேர்தல்' உயர்நிலைக்குழு செயலர் நிதேன் சந்திராவுக்கு பாமக தலைவர் அன்புமணி கடிதம் எழுதியதும் குறிப்பிடத்தக்கது.
இச்சட்டத்திற்கு பல்வேறு கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று வெளியிட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்' முறை அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதிகள் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஒரே நாடு ஒரே தேர்தல்.. பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு.. முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன? - BJP Manifesto 2024