ETV Bharat / state

ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தனித் தீர்மானம் - சட்டப்பேரவையில் நிறைவேற்றம்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 1:10 PM IST

Updated : Feb 15, 2024, 6:33 AM IST

Resolution against one nation one election: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கொண்டு வந்த ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திட்டங்களுக்கு எதிரான 2 தனித் தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

Etv Bharat
Etv Bharat

ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திட்டங்களுக்கு எதிரான 2 தனித் தீர்மானங்கள் சட்டப்பேரவையில் தாக்கல்

சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3வது நாளான இன்று (பிப்.14), வினாவிடை நேரம் முடிவுற்ற பிறகு, நேரமில்லா நேரத்தில் பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரண்டு முக்கிய தனித் தீர்மானங்களையும் நிறைவேற்றித் தருமாறு சட்டப்பேரவையில் உள்ள அனைவரையும் கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டு, பின்வரும் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

தீர்மானம் 1: 2026 ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட இருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும். தவிர்க்க இயலாத காரணங்களினால் மக்கள்தொகையின் அடிப்படையில் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால், 1971ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் தற்பொழுது மாநிலச் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

மக்கள் நலன் கருதி, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூகப் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களையும், மக்கள் நல்வாழ்வு திட்டங்களையும் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்றும் இந்தப் பேரவை வலியுறுத்துகிறது' என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

தீர்மானம் 2: 'ஒரு நாடு ஒரு தேர்தல்' என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதாலும், நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று என்பதாலும், அது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று என்பதாலும், இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட பரந்து விரிந்த நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள், மாநிலச் சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் பல்வேறு காலகட்டங்களில் மக்கள் பிரச்னைகளை முன்வைத்தே நடத்தப்படுவதாலும், அதிகாரப் பரவலாக்கல் என்ற கருத்தியலுக்கு அது எதிரானது.

இதனால், 'ஒரு நாடு ஒரு தேர்தல்' திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மத்திய அரசை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்' எனக் கூறி அமர்ந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய பேரவை உறுப்பினர்கள், தங்களது கருத்துகளையும் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு இரண்டு தீர்மானங்களின் மீது பொது குரல் வாக்கெடுப்பை எடுத்தார். இதில், முதலமைச்சர் கொண்டு வந்த பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசின் இரண்டு தனித் தீர்மானங்களும் சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: மாநிலங்களவை தேர்தலில் எல்.முருகன் போட்டி! மீண்டும் எம்.பியாகிறார்!

Last Updated :Feb 15, 2024, 6:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.