தமிழ்நாடு

tamil nadu

'ராஜ துரோகி எடப்பாடி பழனிசாமியை வெற்றி பெற விடமாட்டோம்' - ஓபிஎஸ் ஆவேசம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 10:41 AM IST

O.Panneerselvam: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈபிஎஸ் நிற்க வைக்கும் அனைத்து வேட்பாளர்களும், டெபாசிட் இழப்பார்கள் எனவும் ராஜ துரோகியான எடப்பாடி பழனிசாமியை தேர்தலில் வெற்றி பெற விடமாட்டோம் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

O Panneerselvam alleged about Edappadi K Palaniswami
ஈபிஎஸ் நிற்க வைக்கும் அனைத்து வேட்பாளர்களும், டெபாசிட் இழப்பார்கள்

ஈபிஎஸ் நிற்க வைக்கும் அனைத்து வேட்பாளர்களும், டெபாசிட் இழப்பார்கள் என ஓபிஎஸ் ஆவேசம்

தேனி: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு அமமுக சார்பில் தேனியில் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று (பிப்.24) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "தேனியில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்திற்கு மாநில மாநாடு போல் கூட்டம் நிரம்பி இருக்கிறது. 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்பது போல உள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த கூட்டம் போல் இங்குத் தொண்டர்கள் ஒருங்கிணைந்து வந்துள்ளனர்.

ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச் செயலாளர் என்ற சட்ட விதியை மாற்றி போலி பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி என்கிற நபர் இந்த பதவியைக் கபளீகரம் செய்துள்ளார். எப்போது ஜெயலலிதா இறப்பார்கள் என்ற நேரம் பார்த்து பழனிசாமி சகுனி வேலைகளைச் செய்தார்' என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

மேலும் பேசிய அவர், 'இதுமட்டுமில்லாமல், மூன்றாவது முறையாக சசிகலா தான் என்னை முதலமைச்சராக்கினார். பதவியைப் பெற்றுத் தந்த சசிகலா, டிடிவி தினகரனுக்குத் துரோகம் செய்த எடப்பாடி கே.பழனிசாமியை அரசியலை விட்டு விரட்ட வேண்டும் என்பதற்காக டிடிவி தினகரன் அமமுக ஆரம்பித்தார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈபிஎஸ் நிற்க வைக்கும் அனைத்து வேட்பாளர்களும், டெபாசிட் இழப்பார்கள்.

எடப்பாடி கே.பழனிசாமி இல்லாத அதிமுகவை மீட்டு, மீண்டும் அதிமுக தொண்டர்களிடம் தருவோம். சரித்திரம் படைத்த அதிமுக கட்சியைப் பல பிரிவுகளாகவும், கூறுகளாகவும் பிரித்த ராஜ துரோகி பழனிசாமியை எந்த தேர்தலிலும் வெற்றியடைய செய்ய விடமாட்டோம் என மக்களும் தொண்டர்களும் வெகுண்டெழுந்து உள்ளார்கள். நான் ஆரம்பித்தது தர்ம யுத்தம் நீங்கள் ஆரம்பித்தது தர்மப் போர்" என்று பேசினார்.

இதையும் படிங்க: தந்தையை கொலை செய்த வழக்கு; தாய் - மகனுக்கு ஆயுள் தண்டனை!

ABOUT THE AUTHOR

...view details