தமிழ்நாடு

tamil nadu

'நடிகர் விஜய்யின் அரசியலை தீவிரமாக பார்க்க அவசியமில்லை' - அமைச்சர் மனோ தங்கராஜ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2024, 1:20 PM IST

தமிழ்நாடு சாதித்தவற்றில் பாதி அளவு கூட வட இந்திய மாநிலங்கள் சாதிக்கவில்லை. மதச்சார்பற்ற ஆட்சி அமைக்க, நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கவும் அனைவரும் சூளுரைப்போம் எனப் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

Minister T Mano Thangaraj press meet
அமைச்சர் மனோ தங்கராஜ்

அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளிடம் பேட்டி

கன்னியாகுமரி: அறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள அண்ணாவின் சிலைக்கு திமுக, அதிமுக, மதிமுக, அமுமுக, அதிமுக ஓபிஎஸ் அணி என பல்வேறு கட்சியினரும் மரியாதை செலுத்தினர். அந்தவகையில், திமுகவைச் சேர்ந்த நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் தலைமையில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவகுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, நாகர்கோவில் மாவட்ட தலைமை திமுக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக நடந்து வந்து வடசேரியில் அமைந்து உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், "பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் அவர் கட்டிக்காத்த கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்டும் விதமாக, மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் எந்த சக்திகளையும் இந்த மண்ணில் வளர விடமாட்டோம் என்கிற உறுதியை தமிழகம் முழுவதும் திமுகவினர் எடுத்துள்ளனர். அதற்கேற்ப, வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஆட்சி, ஜனநாயகத்தை பாதுகாக்கவும், இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் மற்றும் மாநிலங்களின் உரிமைகள் பறி போகி விடாதபடி அனைவரும் சூளுரைப்போம்" என்று கூறினார்.

"ஊழல் பட்டியலில் இந்தியா கவலைக்குரிய இடத்தில் உள்ளது. மத்திய அரசு எப்படிப்பட்ட படுகுழிக்குள் நாட்டை கொண்டு செல்கிறது என்பதைப் புரிந்து பேச வேண்டும். உலக அளவில் இந்தியாவின் ஊழல் முன்னணியில் உள்ளது. மனிதவள மேம்பாட்டில் பின்னடைவு போன்றவற்றை கருத்தில் கொண்டு நடிகர் விஜய் பேசி இந்தியாவில் ஊழல் அரசியல் நிகழ்வதாக கூறியிருப்பார் என்று கருதுகின்றேன்" எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், "நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை தீவிரமாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நல்ல நோக்கத்தை நிறைவேற்றும் கொள்கை கொண்டதாக அரசியல் கட்சி அமைய வேண்டும். அரசியல் ரீதியாகக் கொள்கை கொண்ட கட்சியாக கட்டமைக்கிறார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து அண்ணாவின் கனவு தமிழகத்தில் நிறைவடைந்ததா? என்பது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கும், "அண்ணாவின் கனவும் நிறைவடைந்ததன் காரணமாகத்தான் தமிழக அரசு கல்வியில் உலக அளவில் முன்னேறி இருக்கிறது. தமிழ்நாடு சாதித்தவற்றில் பாதி அளவு கூட வட இந்திய மாநிலங்கள் சாதிக்கவில்லை" என மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பாஜக-அதிமுகவை பிரித்ததே அண்ணாமலை? தேர்தலில் அண்ணாமலையின் பங்கு 'பூஜ்யம்' - எஸ்.வி.சேகர் பகீர் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details