தஞ்சாவூர்: தஞ்சையில் திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சை கீழவாசல் பகுதியில் இன்று (ஏப்.02) வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "ஆண்கள் எல்லாம் எங்கள் மீது கோபமாக உள்ளார்கள். ஏனென்றால், திராவிட மாடல் அரசு பெண்களுக்கான அரசாக, பெண்களுக்கு நலத்திட்டங்கள் செய்து வருகிறது.
திராவிட மாடல் அரசு என்பது, தமிழகத்தில் மட்டும் இருந்தால் பத்தாது, நமக்கான அனுசரணையான அரசு மத்தியிலும் இருந்தால்தான் நாம் கேட்கின்ற நிதியாக இருந்தாலும் சரி, பல்வேறு திட்டங்களாக இருந்தாலும் சரி, நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படும் வகையில் நம்மை நாடி வரும்.
நம்முடைய பெண்கள் தன்னம்பிக்கையோடு சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று ஆசைப்படுபவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர். அதனால்தான், திட்டங்கள் பெண்களைத் தேடி அதிகப்படியாக வந்து கொண்டிருக்கிறது.
பெண்கள்தான் எங்களுக்கான பிரச்சார பீரங்கிகள். 10 வருடங்களுக்கு முன்பு கேஸ் விலை குறைவாக இருந்தது, இன்றைக்கு அதிகமாக உள்ளது. மகளிர் தினத்தை முன்னிட்டு கேஸ் விலை குறைப்பு என்று பிரதமர் கூறுகிறார். ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினம் வருவது தெரியவில்லையா? தேர்தல் வந்தால் மட்டும் தெரிகிறதா?