ETV Bharat / state

தேர்தல் நேரத்தில் பாஜகவினர் கச்சத்தீவை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகின்றனர் - அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் பேச்சு! - ADMK candidate about katchatheevu

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 10:42 PM IST

Jayavardhan about katchatheevu: பாஜக கச்சத்தீவு குறித்துத் தீர்வு காணும் வகையில் கையில் எடுத்திருந்தால் சாபாஸ் என்று சொல்லி இருப்பேன், ஆனால் தேர்தல் நேரத்தில் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள் என அதிமுக தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் ஜெயவர்த்தன் பேசியுள்ளார்.

அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் பேச்சு
தேர்தல் நேரத்தில் பாஜகவினர் கச்சத்தீவை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகின்றனர்

தேர்தல் நேரத்தில் பாஜகவினர் கச்சத்தீவை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகின்றனர்

சென்னை: பாஜக கச்சத்தீவை வைத்துத் தேர்தல் நேரத்தில் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர் எனவும், 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் தற்போது தேர்தலுக்காக பேசுகின்றனர் என்றும் அதிமுக தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் ஜெயவர்த்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

தியாகராய நகர் சட்டமன்ற பகுதிக்குட்பட்ட கே.கே.நகர் பகுதியில் அதிமுக தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் ஜெயவர்த்தன் இன்று (ஏப்.01) 7வது நாளாகப் பிரச்சாரம் மேற்கொண்டார். கேகே நகர் சோம சுந்தர பாரதி நகர், ஒட்டகப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவருக்குப் பொதுமக்களும் கட்சியினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரச்சாரத்திற்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தன், “பிரச்சாரத்திற்குச் சென்ற இடங்களில் மகளிர் அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர், மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அனைத்து நாடாளுமன்றத் தொகுதியிலும் அதிமுக மற்றும் அதிமுக தோழமைக் கட்சிகள் நிச்சயம் வெற்றி பெறும்.

அத்தியாவசிய பிரச்சனையான குடிநீர் இல்லாததைக் கூட குறைகளாக என்னிடம் மக்கள் கூறுகின்றனர். குடிநீர் வரவில்லை என்றால் அதனைத் தீர்க்க நாடாளுமன்ற உறுப்பினர் எவ்வாறு செயல்பட வேண்டுமென உள்ளது. நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது கோடைக்காலத்தில் மழை பெய்யாமல் வறட்சி இருந்தது.

அப்பொழுது, 150 எம்எல்டி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமைக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினேன். அதன் பயனாகக் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதேபோல் பேரூரில் 4,500 கோடி கடன் நீராக்கும் திட்டத்திற்கு முதல் கட்டமாக 1200 கோடி நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பெற்றுத் தந்தேன்.

ஆனால் திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர், கடந்த ஐந்தாண்டுகளாகக் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கோ, நகர்ப்புற வளர்ச்சிக்காக மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரையோ சந்தித்து தொகுதியின் மேம்பாட்டிற்கு நிதி கேட்கவில்லை. அவர் ஒரு புரிதல் இல்லாத உறுப்பினராக இருந்துள்ளார். திமுக அரசின் மீது ஒட்டு மொத்தமாக மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

மக்கள் 2021 ம் ஆண்டில் விலைவாசி எவ்வாறு இருந்தது என்பதையும், தற்போது விலைவாசி எவ்வளவு உள்ளது என்பதையும் சிந்தித்துள்ளனர். விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, கோடைக்காலத்தில் மாணவர்கள் சாப்பிடும் ஐஸ்கிரீம்களிலும் லாபம் பார்க்க வேண்டும் என ஒட்டுமொத்தமாகக் கொள்ளையடிப்பதிலேயே குறியாக உள்ளனர்.

எனவே மக்களைப் பொருத்தவரை நம்பிக்கை நட்சத்திரமாக அதிமுகவினருக்கு வாக்களிக்க வேண்டுமெனக் கூறுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. எனவே தமிழகம் முழுவதும் உள்ள திமுகவிற்கு எதிரான வாக்குகள் தேர்தலில் எதிரொலிக்கும். வடபழனியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேண்டும் என்பதற்காக மேம்பாலம் போட்டோம்.

சென்னையில் மெட்ரோ ரயில் போட வேண்டும் என்பதற்காகத் தொலைநோக்குப் பார்வையுடன் நடவடிக்கை மேற்கொண்டேன். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கையில் எடுத்தேன். நாடாளுமன்ற உறுப்பினரானால், மீண்டும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

கச்சத்தீவை பாஜக கையில் எடுத்துள்ளது, தீர்வு காணும் வகையில் கையில் எடுத்திருந்தால் சாபாஸ் என்று சொல்லி இருப்பேன். 10 வருடமாக ஆட்சியில் இருக்கின்றனர், கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் சேர்ந்துகொண்டு மக்களை ஏமாற்றியுள்ளனர். கச்சத்தீவை இழந்ததற்குக் காரணம் இவர்கள்தான். கச்சத்தீவை திமுக, காங்கிரஸ் தான் கொடுத்தது என்பது யாருக்கும் தெரியாதா?

கச்சத்தீவு குறித்து ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன், பிரதமர் நாடு நாடாகப் போகிறார், தமிழக மீனவர்கள் பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை குறித்து துளியாவது பேசியுள்ளாரா?. நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தில் இருந்துகொண்டு ஏதேனும் நடவடிக்கை எடுத்தீர்களா? என்று கேள்வி எழுப்பினேன். கச்சத்தீவை வைத்துத் தேர்தல் நேரத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். பாஜக 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் தற்போது பேசுவது தேர்தலுக்காகத்தான்”, என சாடியுள்ளார்.

இதையும் படிங்க: "கச்சத்தீவை கொடுத்துவிட்டு 45 வருடங்களுக்கு மேல், திமுக நாடகம் ஆடுகிறது" - அண்ணாமலை குற்றச்சாட்டு! - Annamalai Katchatheevu Issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.