தமிழ்நாடு

tamil nadu

தெற்கு ரயில்வே ஊழியர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட சென்னை ஐகோர்ட் மறுப்பு! - Lok Sabha Election 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 10, 2024, 3:10 PM IST

2024 Lok Sabha Election: தெற்கு ரயில்வே ஊழியர்களுக்குத் தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில், ராணுவம், துணை ராணுவப்படை வீரர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஊடகத்தினர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் வாக்களிக்க ஏதுவாக தபால் வாக்கு செலுத்த அனுமதியளிக்கப்படுகிறது.

இதில், தெற்கு ரயில்வே ஊழியர்கள் சேர்க்கப்படவில்லை என்றும், அவர்களையும் சேர்க்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மதுரை கோட்டத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றும் ராம்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில்,"ரயில் ஓட்டுநர்கள், ரயில் நிலைய அதிகாரிகள், பயணச்சீட்டு பரிசோதகர்கள் வாக்கு செலுத்த விடுப்பு எடுக்க இயலாது என்பதால், நாடாளுமன்றத் தேர்தலில் தபால் வாக்களிக்க அனுமதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் பரிசீலிக்கப்படவில்லை" என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், தபால் வாக்குப் பதிவுக்கு அனுமதியளிப்பது தொடர்பாக விண்ணப்பிக்கும்படி, தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்குக் கடிதம் அனுப்பியும், கடைசி நாளான பிப்ரவரி 20ஆம் தேதி வரை தெற்கு ரயில்வே தரப்பில் விண்ணப்பிக்கப்படவில்லை.

தபால் வாக்குப்பதிவு செய்வதற்குச் சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் மார்ச் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தற்போது தபால் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்து வருகிறது. கூடுதலாக, தபால் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்க முடியாது என்பதால், தபால் வாக்களிக்க தெற்கு ரயில்வே ஊழியர்கள் உரிமை கோர முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தெற்கு ரயில்வே தரப்பில், நேரில் வாக்களிக்க ஏதுவாக ஊழியர்களுக்கு விடுப்பு வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடைசி நேரத்தில் கூடுதல் தபால் வாக்குச் சீட்டுக்களை அச்சடிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர். மேலும், ஊழியர்கள் நேரில் வாக்களிக்க ஏதுவாக விடுப்பு வழங்குவது குறித்துப் பரிசீலிக்கும்படி தெற்கு ரயில்வேவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்குச் சென்ற 2 திமுக நிர்வாகிகள் விபத்தில் உயிரிழப்பு.. சிறுமிகள் உட்பட 21 பேர் படுகாயம்! - Salem Accident

ABOUT THE AUTHOR

...view details