திருவள்ளூர்: திருநின்றவூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஞானவேல் என்பவரின் மனைவி ராஜம்மாள். இவர் பார்வை திறன் குறைபாடு உடையவர். இவரது கணவர் மாரடைப்பால் உயிரிழந்ததால், இறுதிச் சடங்கு செய்யப் பணம் இல்லாமல் செய்வதறியாது தவித்துள்ளார்.
அப்போது மாற்றுத்திறனாளி நலத்துறை வாரியத்தால் வழங்கப்படும் ரூ.17 ஆயிரம் பெற திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசனை அணுகிய போது, இறப்பு சான்றிதழ் பெற்று வரும் படி திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இத்தகவலை அறிந்த மாற்றுத்திறனாளி உறுப்பினர் சிம்ம சந்திரன் என்பவர் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தின் இயக்குநர் லட்சுமியைத் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது லட்சுமி உடனடியாக ரூ.2 ஆயிரம் வழங்கச் சீனிவாசனுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சீனிவாசன் ராஜம்மாளிடம் கூகுள் பே எண்ணை அனுப்புங்கள் என்று கேட்டுள்ளார். அப்போது ராஜம்மாள் தன்னிடம் கூகுள் பே வசதி இல்லை என்பதால், வேறொருவர் எண்ணுக்கு அனுப்பும் படி கூறி உள்ளார். ஆனால் வேறு எண்ணுக்கு அனுப்ப முடியாது என சீனிவாசன் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் உடலை நீண்ட நேரம் வைத்திருந்த நிலையில், சிம்ம சந்திரன் தன் நண்பர்களின் உதவியுடன் இறுதிச் சடங்கு செய்ய ராஜம்மாளுக்கு உதவி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகத் தனியார் நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன் இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன் வரும் மார்ச் 19ஆம் தேதி நேரில் ஆஜராகிப் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க:பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்க வாய்ப்பு.. தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் தகவல்!